சோழவந்தான்,
மதுரை மாவட்டம், சோழவந்தானில் பிரசித்தி பெற்ற ஜெனகை மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் அமாவாசைக்கு பின்னர் வரும் திங்கட்கிழமை வைகாசி திருவிழா கொடியேற்றம் தொடங்குவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடியேற்ற பொருட்கள் மேளதாளத்துடன் நான்கு ரதவீதிகளில் வலம் வந்து கோவில் வளாகத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் திருவிழா கொடியேற்றப்பட்டது. பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
மேலும் பால்குடம், அக்னி சட்டி, பூக்குழி உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினார்கள். அர்ச்சகர் சண்முகவேல் பூஜைகளை செய்தார்.
கொடியேற்ற நிகழ்வில கருப்பையா எம்.எல்.ஏ., பேரூராட்சி தலைவர்கள் சோழ வந்தான் ஜெயராமன், வாடிப்பட்டி பால்பாண்டி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
திருவிழா நாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடக்கிறது. பல்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். திருவிழா நாட்களில் காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்காக கோவில் நடைதிறந்திருக்கும் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
விழாவை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஒருவழிப் பாதையில் வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.