ஆன்மிகம்

திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலில் மகா தீபம் ஏற்றம்..!

700 லிட்டர் எண்ணெய், 300 மீட்டர் திரி பயன்படுத்தி தீபம் ஏற்றப்பட்டது.

திருச்சி,

தென் கயிலாயம் என போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானவ சுவாமி கோவிலில், இறைவன் சுயம்பு மூர்த்தியாக, மேற்கு பார்த்து எழுந்தருளியுள்ளார். ஆண்டுதோறும் திருக்கார்த்திகை தினத்தன்று, 273 அடி உயரமுள்ள மலைக்கோட்டை உச்சியில், பிள்ளையார் கோவிலுக்கு அருகில், 40 அடி உயரத்தில் உள்ள கோபுரத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும்.

மலை உச்சியில் மகா தீபம்

மலைக்கோட்டை உச்சியில் மலை மீது 40 அடி உயர கோபுரத்தில் வைக்கப்பட்ட கொப்பரையில், 700 லிட்டர் இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய் மற்றும் நெய் ஊற்றி, 300 மீட்டர் பருத்தி துணியில் தயாரித்த திரியை ஊற வைத்தனர்.

கார்த்திகை தீபத் திருநாளான இன்று மாலையில் தாயுமான சுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு மேளதாளங்களுடன் தீப ஜோதி மலை உச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர் உச்சிப்பிள்ளையார் சன்னதி அருகே உள்ள கொப்பரையில் மாலை 6 மணியளவில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

வீடுகளில் தீபம் ஏற்றி வழிபாடு

மலைக்கோட்டை மகா தீபத்தை தரிசித்த பின்னர் திருச்சி மாநகரப் பகுதி மக்கள், தம் வீடுகளில் தீபம் ஏற்றி வழிபடுவார்கள்.

3 நாட்கள் தொடர்ந்து எரியும் தீபம்

திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலின் மலை உச்சியில் ஏற்றப்படும் தீபம் வெயில், மழை, காற்று பாராமல் மூன்று நாட்கள் சுடர்விட்டு எரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT