விநாயகர் 
ஆன்மிகம்

மகா சங்கடஹர சதுர்த்தி.. வேலாயுதம்பாளையம் பகுதி விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு

சிறப்பு பூஜைகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானை தரிசனம் செய்தனர்.

வேலாயுதம்பாளையம்,

மகா சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

சிறப்பு வழிபாடு

கரூர் மாவட்டம், முத்தனூர் தருண கணபதி ஆலயத்தில் விநாயகப் பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் விநாயகப் பெருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

சிறப்பு பூஜைகளில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

அதேபோல் சேமங்கி, மறவாபாளையம், நொய்யல், குறுக்கு சாலை அண்ணா நகர், அத்திப்பாளையம், குப்பம், உப்பு பாளையம், புன்னம்சத்திரம், புன்னம், மூலிமங்கலம், காகிதபுரம், வேலாயுதம்பாளையம் புகழிமலை அடிவாரம்,, திருக்காடுதுறை, நன்செய் புகளூர், தவுட்டுப்பாளையம், பாலத்துறை மற்றும் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விநாயகர் கோவிலில் மகா சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

சக்தி வாய்ந்த நாள்

வருடத்திற்கு ஒருமுறை மட்டும் மகா சங்கடஹர சதுர்த்தி மிகவும் சக்தி வாய்ந்த நாளாகும். இந்த நாளில் விரதம் இருந்து விநாயகரை வழிபட்டால் ஒரு ஆண்டில் வரும் அனைத்த சங்கடஹர சதுர்த்தி நாளிலும் விரதம் இருந்து விநாயகரை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

SCROLL FOR NEXT