ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோவிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் 
ஆன்மிகம்

ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோவிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா தொடங்கியது

ஸ்ரீகாளஹஸ்தி கோவில் மூலவர் சன்னதியில் கண்ணப்பர் சிலைக்கு ஆர்த்திக்கு பின்னர் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரருக்கு பூஜை செய்வது வழக்கம்.

ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோவிலில் மகாசிவராத்திரியை முன்னிட்டு 13 நாட்கள் பிரம்மோற்சவம் நடத்துவது வழக்கம். மற்ற அனைத்து கோவில்களிலும் 10 நாட்கள் மட்டுமே நடத்தப்படும் பிரம்மோற்சவம், ஸ்ரீ காளஹஸ்தி கோவிலில் மட்டும் 13 நாட்கள் நடத்தப்படுகிறது.

அறுபத்து மூன்று நாயன்மார்களில் கண்ணப்ப நாயனாரும் ஒருவர். இவரது இயற்பெயர் திண்ணன். தீவிர பக்தியுடன் சிவபெருமானை வழிபட்டு, தன் கண்களை கொடுக்க தயாராக இருந்த பக்தர் திண்ணனுக்கு காட்சியளித்து அருள்பாலித்தார். அத்தகைய பக்தர்களிடம் சிவபெருமான் கொண்டிருந்த அன்பை வெளிப்படுத்தும் வகையில் ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் இன்றும், மூலவர் சன்னதியில் கண்ணப்பர் சிலைக்கு ஆர்த்திக்கு பின்னர் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரருக்கு பூஜை செய்வது வழக்கம்.

இந்த நிலையில் மகா சிவராத்திரி விழா கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று கோவில் அலங்கார மண்டபத்தில் ராஜேஷ் குருக்கள் தலைமையில் உற்சவர் பக்த கண்ணப்பருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுடன் மேள தாளங்கள் மற்றும் மங்கள வாத்தியங்களுடன் கோவில் அருகில் உள்ள கைலாச மலைக்கு ஊர்வலமாக கொண்டு சென்றனர்.

அங்கு கோவில் தலைமை அர்ச்சகர் சுவாமிநாதன் குருக்கள் தலைமையில் கண்ணப்பர் மலையில் உள்ள பழமையான பக்த கண்ணப்பர் கோவில் வளாகத்தில் சிறப்பு கலசத்தை நிறுவி, பூஜைகளை செய்தார். தொடர்ந்து அங்குள்ள கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு. வேதப் பண்டிதர்கள் வேதங்கள் ஓத, தலைமை அர்ச்சகர் வரதா குருக்கள் பூஜைகள் மேற்கொண்டார். தொடர்ந்து கொடி மரத்தில் கண்ணப்பர் கொடி ஏற்றப்பட்டு பிரம்மோற்சவ விழா தொடங்கியது.

பின்னர் ஆராதனை, பூஜைகள் செய்து நெய்வேத்யம் வழங்கப்பட்டது. முன்னதாக கொடிமரம் எதிரே உள்ள ஈஸ்வர லிங்கத்திற்கு சிறப்பு ஆராதனை செய்தனர். பின்னர், முத்துக்குமார சுவாமியின் தேவார பாராயணத்துடன் நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன.

கைலாச மலையில் உள்ள பக்த கண்ணப்பர் கோவிலில் மூலவர் சன்னதியில் சிறப்பு பூஜைகளை தொடர்ந்து பிரசாதம் வழங்கப்பட்டது. அங்கிருந்து, மலையில் உள்ள திக் பாலகர்களை சிறப்பு வரவேற்பு செய்தனர். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Also read:சீனிவாசமங்காபுரம் பிரம்மோற்சவம்: கற்பகவிருட்ச வாகனத்தில் வலம் வந்த கல்யாண வெங்கடேஸ்வரர்