ஆன்மிகம்

விடிய விடிய சிறப்பு பூஜைகள்.. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 15-ந்தேதி மகா சிவராத்திரி விழா

மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் உபகோவில்களில் மகா சிவராத்திரியன்று இரவு முழுவதும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரி விழா வருகிற 15-ந் தேதி இரவு 10 மணி முதல் மறுநாள் (16-ந் தேதி) காலை வரை நடக்கிறது. இதையொட்டி மீனாட்சி அம்மன் கோவிலில் இரவு 4 கால பூஜைகள் நடைபெறுகின்றன.

அதன்படி மீனாட்சி அம்மன் சன்னதியில் முதல் கால பூஜை இரவு 10 மணிக்கு தொடங்கி 10.40 மணி வரையிலும், 2-ம் கால பூஜை 11 மணிக்கு தொடங்கி 11.40 மணி வரையிலும், 3-ம் கால பூஜை 12 மணிக்கு தொடங்கி 12.40 மணி வரையிலும், 4-ம் கால பூஜை நள்ளிரவு 1 மணிக்கு தொடங்கி 1.40 மணி வரையிலும் நடைபெறும்.

அதே போன்று சுவாமி சன்னதியில் முதல் கால பூஜை இரவு 11 மணிக்கு தொடங்கி 11.45 மணி வரையிலும், 2-ம் கால பூஜை இரவு 12 மணிக்கு தொடங்கி 12.45 மணி வரையிலும், 3-ம் கால பூஜை நள்ளிரவு 1 மணிக்கு தொடங்கி 1.45 மணி வரையிலும், 4-ம் கால பூஜை 2 மணிக்கு தொடங்கி 2.45 மணி வரையிலும் நடைபெறும்.

அதை தொடர்ந்து அதிகாலை 3 மணிக்கு அர்த்த ஜாம பூஜையும், 4 மணிக்கு பள்ளியறை பூஜையும், 5 மணிக்கு திருவனந்தல் பூஜையும் நடைபெற உள்ளது.

இரவு முழுவதும் தரிசனம்

அதே போன்று மீனாட்சி அம்மன் கோவிலை சேர்ந்த பழைய சொக்கநாதர் கோவில், தெப்பக்குளம் முக்தீசுவரர் கோவில், செல்லூர் திருவாப்புடையார் கோவில் உள்ளிட்ட உபகோவில்களில் இரவு முழுவதும் அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் அன்று இரவு முழுவதும் நடைபெறும் 4 கால பூஜை அபிஷேகத்திற்கு தேவையான பால், தயிர், இளநீர், பன்னீர், பழவகைகள், தேன், மஞ்சள் பொடி, எண்ணெய், நெய் மற்றும் இதர அபிஷேக பொருட்களை 15-ந் தேதி மாலைக்குள் மீனாட்சி கோவில் உள்துறை அலுவலகத்திலும், அந்த உபகோவில்களிலும் பக்தர்கள் ஒப்படைக்கலாம்.

சிவராத்திரி விழாவையொட்டி மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதன் உபகோவில்களில் இரவு முழுவதும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Also read:புதுச்சேரியில் ஆதியோகி ரத யாத்திரை: வரும் 8-ஆம் தேதி முதல் 3 நாட்கள் நடைபெற உள்ளது