கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் ஸ்ரீ குகநாதீஸ்வரர் கோவில் உள்ளது.1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலை மாமன்னன் ராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலை கட்டுவதற்கு முன்பே கட்டி உள்ளதாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. குகன் என்ற முருகக்கடவுள் ஈஸ்வரன் என்ற சிவனை இங்கு வழிபட்டதால் இந்த கோவிலுக்கு குகநாதீஸ்வரர் கோவில் என்று பெயர்வரக் காரணமாயிற்று.
குமரி மாவட்டத்தில் உயரமான ஐந்தரை அடி உயர சிவலிங்க சிலை இந்த கோவில் மூலஸ்தானத்தில் அமைந்து உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
வரலாற்று சிறப்புமிக்க இந்த குகநாதீஸ்வரர் கோவிலில் மகாசிவராத்திரி விழா, வருகிற 15-ந்தேதி நான்கு கால பூஜைகளுடன் விடிய விடிய நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.
மகா சிவராத்திரியையொட்டி 15-ம் தேதி அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமமும், காலை 7 மணிக்கு அபிஷேகமும் 7.30 மணிக்கு தீபாராதனையும், 10.30 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், பகல் 12 மணிக்கு அலங்கார தீபாராதனையும், 12.30 மணிக்கு அன்னதானமும் நடக்கிறது.
மாலையில் மகா சிவராத்திரி விழா 4 கால பூஜைகளுடன் நடக்கிறது. அதாவது இரவு 8.30 மணிக்கு முதல் கால பூஜையும், 10.30 மணிக்கு இரண்டாம் கால பூஜையும், நள்ளிரவு 12.30 மணிக்கு மூன்றாம் கால பூஜையும், அதிகாலை 3.30 மணிக்கு நான்காம் கால பூஜையும் நடக்கிறது.
ஒவ்வொரு கால பூஜை முடிந்த பிறகும் அன்னதானம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேரவையினர் செய்து வருகிறார்கள்.