சேஷ வாகன சேவை 
ஆன்மிகம்

மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம்- சேஷ வாகன சேவை

பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்துடன் சேஷ வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

மாமல்லபுரம்,

மாமல்லபுரத்தில் உள்ள தலசயன பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெறும். அவ்வகையில் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழாவிற்காக கடந்த 16-ம் தேதி பந்தக்கால் நடப்பட்டது. 24-ம் தேதி பிரம்மோற்சவ கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு மங்களகிரி உற்சவங்கள் நடைபெற்றன.

விழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜைகள், வாகன சேவை நடைபெறுகிறது. பல்வேறு வாகனங்களில் உற்சவர்கள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

விழாவின் நான்காம் நாளான இன்று சேஷ வாகன சேவை நடைபெற்றது. பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்துடன் சேஷ வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கருட சேவை நாளை நடைபெறுகிறது. 30-ந் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.