மண்டைக்காடு:
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசிக் கொடைவிழா கடந்த 1ம் தேதி திருக்கொடி ஏற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. விழாவின் நான்காம் நாளான நேற்று சந்தனகுடம் பவனி நடந்தது.
விழாவை முன்னிட்டு காலை 4.30 மணிக்கு திருநடை திறப்பு, கணபதி ஹோமம், உஷ பூஜை, அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி, உச்சபூஜை, தங்கத்தேர் பவனி நடைபெற்றது. பகல் 11.30 மணிக்கு மேற்கு நெய்யூர் ஊரம்மன் கோவிலில் இருந்தும், 12.30 மணிக்கு வெட்டுமடை இசக்கி அம்மன் கோவிலில் இருந்தும், மாலை 6 மணிக்கு கொத்தனார்விளை விடாலமுத்து சிவன் கோவிலில் இருந்தும் பகவதி அம்மன் கோவிலுக்கு சந்தனக் குடம் பவனி வந்தடைந்தது.
மாலை 6.30க்கு அம்மனுக்கு சந்தனம் சார்த்தி அலங்கார தீபாராதனை, இரவு 9 மணிக்கு அத்தாழ பூஜை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.
ஐந்தாம் நாளான இன்று மணவாளக்குறிச்சி மணல் ஆலை வளாகத்தில் இருந்து சந்தனகுடம் பவனி, ஆறாம் நாளான நாளை பருத்திவிளை, உண்ணாமலைக்கடை மற்றும் குளச்சல் களிமார் ஆகிய இடங்களில் இருந்து சந்தனகுடம் பவனி, நள்ளிரவு 11 மணிக்கு மேல் 12 மணிக்குள் வலியபடுக்கை என்னும் மகாபூஜை நடக்கிறது.