திருவனந்தபுரம்,
மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி தினமும் சபரிமலை தரிசனத்துக்கு 80 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனுக் காக சபரிமலை கோவில் நடை நாளை மறுநாள் (திங்கட்கிழமை) திறக்கப்படுகிறது. இதனையொட்டி அங்கு முன்னேற்பாடு பணிகளை திருவிதாங்கூர் தேவஸ்தானம் செய்து வருகிறது. இந்தநிலையில் அரவணை பிரசாதம் வழங்குவதில் உரிய முன்னேற்பாடு செய்யாததால், இந்த சீசனில் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தான ஊழியர்கள் சங்கம் குற்றம்சாட்டியது. இதற்கு தேவஸ்தான நிர்வாகம் மறுப்பு தெரிவித்திருந்தது.
இதனை தொடர்ந்து நேற்று திருவனந்தபுரத்தில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நடப்பு சீசனில் எந்த விதத்திலும் அரவணை பிரசாதம் தட்டுப்பாடு வராத வகையில் முன்னேற்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தினசரி 3.5 லட்சம் டின் அரவணை உற்பத்தி செய்யப்படும் நிலையில் தற்போது 50 லட்சம் டின் அரவணை இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
தினமும் தேவை 4 லட்சம் என கணக்கிடப்பட்டுள்ள நிலையில் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சன்னிதானத்தில் 5 தானியங்கி கவுண்ட்டர்கள் உள்பட 27 கவுண்ட்டர்களில் அரவணை அப்பம் வினியோகிக்கப்படும். இவை தவிர தபால் நிலையம் மூலம் முன்பதிவு செய்பவர்களுக்கு பார்சல்கள் மூலம் அரவணை அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். இதில் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் 66 ஆயிரம் பேர். உடனடி தரிசனம் மூலம் 14 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்படும். நிலக்கல், எருமேலி, வண்டிப்பெரியார், சத்ரம் மற்றும் செங்கன்னூரில் உடனடி தரிசன முன்பதிவு மையங்கள் செயல்படும். நெய் கொள்முதல் மோசடியை தவிர்க்க அவ்வப்போது கொள்முதல் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. டெண்டர் நடவடிக்கைகள் பூர்த்தியானதும் முழுமையாக நெய் வாங்கப்படும்.
சபரிமலைக்கு முன்பதிவு செய்து வரும் அய்யப்ப பக்தர்களில் யாருக்காவது மரணம் ஏற்பட்டால் அவர்களது குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். இதற்காக ரூ.1.5 கோடி எல்.ஐ.சி. நிறுவனத்திற்கு செலுத்தப்படும். பக்தர்கள் ஓய்வெடுக்க நிலக்கல், பம்பையில் 9 ஆயிரம் பேர் தங்கும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தகவல் மையமும் செயல்படும். சீசனை முன்னிட்டு ரூ.14.14 கோடியில் சாலக்காயம்-பம்பை இடையே சாலை பராமரிப்பு பணிகள் முடிவடைந்துள்ளது. சபரிமலை சக்கு பாலம் பகுதியில் 400 வாகனங்களை நிறுத்தவசதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.