சபரிமலை,
நடப்பு மண்டல, மகரவிளக்கு சீசனுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று (திங்கட்கிழமை) திறக்கப்படுகிறது. இதனையொட்டி பக்தர்கள் சிரமமின்றி அய்யப்பனை தரிசனம் செய்வதற்கான முன்னேற்பாடுகளை திருவிதாங்கூர் தேவஸ்தான நிர்வாகம் செய்துள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி கார்த்திகை மாதம் 1-ந் தேதி முதல் 60 நாட்கள் நடை திறந்து சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். அந்த சீசனில் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை கடைபிடித்து இருமுடி கட்டி வந்து சபரிமலையில் அய்யப்பனை தரிசனம் செய்வார்கள்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த மண்டல, மகர விளக்கு சீசனுக்காக சபரிமலை கோவில் நடை இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு பிரம்ம தத்தன் முன்னிலையில் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார்.
இதனை தொடர்ந்து 18-ம் படிக்கு கீழ் உள்ள கற்பூர ஆழியில் தீ மூட்டப்படும். சபரிமலை மற்றும் மாளிகப்புரம் கோவில்களுக்கான புதிய மேல்சாந்திகள் மூலம் மந்திரம் சொல்லி பொறுப்பேற்று கொள்வார்கள். பிறகு இருவரும் தந்திரி முன்னிலையில் அபிஷேகம் செய்யப்படுவார்கள். அன்றைய தினம் வழக்கமான பூஜைகளுக்கு பின் இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படும்.
கார்த்திகை 1-ந் தேதியான நாளை (செவ்வாய்க்கிழமை) முதல், அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜை, வழிபாடு நடைபெறும். கோவில் தந்திரி கண்ட ரரு பிரம்மதத்தன் முன்னிலையில் புதிய மேல்சாந்தி சுப்பிரமணியன் சங்கரன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து பூஜையை நடத்துவார்.
தினமும் அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம் மற்றும் 11.30 மணி வரை நெய் அபிஷேகம், உச்ச பூஜையை தொடர்ந்து மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். மீண்டும் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும்.
இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம், அத்தாள பூஜைக்கு பிறகு இரவு 11 மணிக்கு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு நடை அடைக்கப்படும். கோவிலில் நடப்பு சீசனையொட்டி அடுத்த மாதம் (டிசம்பர்) 27-ந் தேதி மண்டல பூஜையும், ஜனவரி 14-ந் தேதி மகரவிளக்கு பூஜையும் நடைபெறும். சீசன் தொடக்கம் முதல் தினமும் 18 மணி நேர தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சபரிமலையில் முதற்கட்டமாக 9 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சுகாதாரத்துறை சார்பில் 100 டாக்டர்கள் அங்கு பணி அமர்த்தப்படுகிறார்கள். சபரிமலைக்கு செல்வதற்காக கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. சன்னிதானம் பகுதியில் புகைப்படம் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு, உடனடி முன்பதிவு மூலம் பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்கான ஆன்லைன் முன்பதிவு கடந்த மாதம் 29-ந் தேதி தொடங்கிய நிலையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஒரு நாளைக்கு 80 ஆயிரம் பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிக்க திருவிதாங்கூர் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
அந்த வகையில் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினமும் 66 ஆயிரம் பேரும், உடனடி முன்பதிவு அடிப்படையில் 14 ஆயிரம் பேரும் அனுமதிக்கப்படுகிறார்கள். இதில் வரும் நாட்களில் பக்தர்களின் வருகைக்கு ஏற்ப உடனடி முன்பதிவு முறையில் மாற்றம் செய்யப்பட்டு எண்ணிக்கை அதிகரிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.