சமயபுரம்,
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே, கவுண்டம்பட்டி மேலூரில் மகா சூலினி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி தேர் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி, மகாசூலினி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் அம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளியதும் தேர் வடம் பிடிக்கப்பட்டது. மேள தாளங்கள் முழங்க, அதிர்வேட்டுகள் ஒலிக்க பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேர் அனைத்து தெருக்களிலும் சென்று, பின்னர் கோவிலை வந்தடைந்தது.
விழாவில் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் ஆடுகள் வெட்டியும், மாவிளக்கு போட்டு தேங்காய் உடைத்தும் அம்மனை வழிபட்டனர். பின்னர் கோவில் முன்பு சாமியாடி அருள்வாக்கு கூறினார். இதைத்தொடர்ந்து மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெற்றது. விழாவில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.