கும்பாபிஷேகம் 
ஆன்மிகம்

மயிலாடுதுறை: கோவில்பத்து தில்லை காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

விழாவில் கோவில்பத்து மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

தரங்கம்பாடி, மார்ச் 7

மயிலாடுதுறை அடுத்த நீடூர் அருட் சோமநாதர் கோவில் தென்புறத்தில் உள்ள கோவில்பத்து கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ தில்லை காளியம்மன் ஆலயத்தில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி திருப்பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில் நேற்று முன்தினம் யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.

யாகசாலை பூஜை, கோ பூஜை, பூர்ணாஹூதியை தொடர்ந்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடத்தை சிவாச்சாரியார் தலையில் சுமந்தபடி கோவிலை வலம் வந்து விமான கோபுரத்திற்கு சென்றனர். பின்னர் கருடன் வானில் பறக்க, வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத கடத்தில் உள்ள புனித நீரை கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து கருவறையில் உள்ள தில்லை காளியம்மன் சிலைக்கு புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்தனர். முன்னதாக அருகில் உள்ள கன்னி கோவில்களுக்கு புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் கோவில்பத்து மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்திற்கு வந்தவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.