கும்பாபிஷேகம் 
ஆன்மிகம்

சித்தர்காடு ஆலந்துறையப்பர் சுவாமி கோவில் கும்பாபிஷேகம்

கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

தரங்கம்பாடி,

மயிலாடுதுறை அருகே சித்தர்காடு கிராமத்தில் விருச்சிகாம்பாள் சமேத ஆலந்துறையப்பர் சுவாமி கோவில் உள்ளது. கும்பாபிஷேகம் நடந்து 21 ஆண்டுகளுக்குப் பிறகு இக்கோவில் புனரமைக்கப்பட்டது. புனரமைப்பு பணிகள் நிறைவடைந்ததையடுத்து யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.

நான்கு கால யாகசாலை பூஜைகள் நேற்று நிறைவு பெற்றதையடுத்து பூர்ணாஹுதி செய்யப்பட்டு கடம் புறப்பாடு நடைபெற்றது. யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்களை (கடங்கள்) சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்தபடி விருச்சிகாம்பாள் சமய ஆலந்துறையப்பர் ஆலயத்தை சுற்றி வலம் வந்து விமான கும்பத்தை அடைந்தனர்.

அங்கு வேத மந்திரங்கள் முழங்க, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கடத்திலுள்ள புனித நீரை கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். பின்னர் புனித நீரால் கருவறையில் உள்ள சிவலிங்கத்துக்கு மஹா அபிபிஷேகம் செய்யப்பட்டது.

இவ்விழாவில் தருமபுரம் ஆதீனம் கட்டளை தம்பிரான்கள், அறநிலையத்துறை இணை ஆணையர் சிவக்குமார், தக்கார் மற்றும் ஆய்வாளர் ஆரோக்கியமதன், செயல் அலுவலர் ரம்யா, கணக்கர் சிவனேசன், உபயதாரர் அருன் ஐஸ்வர்யா தம்பதிகள், கிராமம், தெரு வாசிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.