மயிலாடுதுறை,
மயிலாடுதுறை தருமபுரத்தில் அமைந்துள்ள 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆதீனத் திருமடத்தில் (தருமை ஆதீனம்) உள்ள ஞானபுரீசுவரர் கோவிலில் வைகாசி பெருவிழா, ஆதீன குருமுதல்வர் குருபூஜை விழா மற்றும் குரு மகா சன்னிதானம் பட்டணப் பிரவேச விழா ஆண்டுதோறும் வைகாசி மாதம் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டின் உற்சவம் கடந்த மாதம் 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் கடந்த 5-ம் தேதி விமரிசையாக நடைபெற்றது. இரண்டு தேர்களில் பஞ்சமூர்த்திகளுடன் சுவாமி, அம்பாள் எழுந்தருளி ஆதினத்தை சுற்றியுள்ள நான்கு வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
விழாவின் 11ஆம் நாளான நேற்று குருமுதல்வர் குருபூஜை விழாவும், முக்கிய நிகழ்ச்சியான தருமபுரம் ஆதீனம் குரு மகா சன்னிதானம் சிவிகை பல்லக்கில் எழுந்தருளும் பட்டணப் பிரவேச விழாவும் கோலாகலமாக நடைபெற்றது.
தருமபுர ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் நேற்று இரவு திருஆபரணங்கள் பூண்டு, தங்க கொரடு பாதரட்சை, கமலம் அணிந்து, திருக்கூட்ட அடியவர்கள் புடைசூழ, சிவகைலாய வாத்தியங்கள், மேளதாள வாத்தியங்கள் முழங்க சிவிகை பல்லக்கில் எழுந்தருளினார். தொடர்ந்து, சிவிகை பல்லக்கினை கோடி நாட்டாமைகள் நான்கு பேர் தலைமையில் அடியவர்கள் சுமந்து சென்றனர்.
அலங்கரிக்கப்பட்ட யானைகள், குதிரைகள் உள்ளிட்ட பரிவாரங்களுடன், மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளுடன் வாணவேடிக்கை முழங்க ஆரவாரத்துடன் சிவனடியார்கள், பக்தர்கள் புடைசூழ தரும்புரம் ஆதீனம் சிவிகை பல்லக்கில் அமர்ந்து வீதியுலா சென்றார்.
ஆதீன மடத்தை சுற்றியுள்ள நான்கு வீதிகளில் பூரணகும்ப மரியாதையுடன் ஆதீன குரு மகா சன்னிதானத்திற்கு பக்தர்கள் வரவேற்பு அளித்தனர். பக்தர்களுக்கு குருமகா சன்னிதானம் ஆசி வழங்கி திருநீறு பிரசாதமாக வழங்கினார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.