தீமிதி விழா 
ஆன்மிகம்

அங்காளம்மன் தீமிதி விழா.. குண்டம் இறங்கும் பக்தர்கள் விரதம் இருப்பது எப்படி?

சபரிமலை செல்லும் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்குவது போன்று, அங்காளம்மன் தீமிதி விழாவில் பங்கேற்கும் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்குகிறார்கள்.

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மாசிப்பெருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. 15.2.2026 மகா சிவராத்திரி நாளில் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான மயானக்கொள்ளை நிகழ்ச்சி 16.2.2026 அன்று நடைபெற்றது. நாளை (19.2.2026) தீமிதி விழா விமரிசையாக நடைபெற உள்ளது.

இவ்விழாவில் கலந்து கொண்டு தீமிதிக்கும் பக்தர்கள் கடுமையாக வெகு சுத்தத்துடன் ஒருவார காலம் விரதம் அனுஷ்டிக்கிறார்கள். இந்த விரதமானது, சபரிமலை அய்யப்பனுக்கு பக்தர்கள் மாலை போட்டு விரதம் தொடங்குவது போன்று, மாலை அணிந்து கொள்வதிலிருந்து தொடங்குகின்றது.

தீமிதி விழாவில் கலந்து கொள்பவர்கள் அவர்கள் ஊரில் உள்ள அங்காளம்மன் கோவிலுக்கு சென்று வணங்கி துளசி மணிமாலை, ருத்திராட்ச மாலை, சந்தன மாலை, பச்சைமணி மாலை இவற்றில் தங்களுக்குப் பிடித்தமான மாலையை வாங்கி அதனை பாலில் நனைத்து பின் மஞ்சள் நீரில் நனைத்து தன் பெற்றோர் அல்லது கோவில் குருக்கள் அல்லது அங்காளம்மன் அருள்வாக்கு பெற்றவர்களிடம் கொடுத்து ஆசி பெற்று அணிந்து கொள்ள வேண்டும்.

தினமும் காலை, மாலை இருவேளையும் குளித்த பின்பு 'ஓம் சக்தி அங்காளம்மா' என உச்சரித்து அங்காளம்மனை வணங்க வேண்டும். இந்த விரதத்தின்போது மஞ்சள் அல்லது காவி நிற உடைகளை அணிவது அவசியமாகும். இந்த விரதம் இருக்க எந்தவித வயது வித்தியாசமும் கிடையாது. மாலை அணிந்தபின் அவர்கள் ‘அங்காளம்மா’ என்றே அழைக்கப்படுவார்கள்.

Also read: திருச்செந்தூர் கோவில் மாசித் திருவிழா: 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

மனத்தூய்மையும், உடல் தூய்மையும் இந்த விரத நாட்களில் மிக அவசியமாகும்.

பெண்கள் இந்த விரதம் இருந்தும்போது மாதவிலக்கு பிரச்சினை ஏற்பட்டால், அன்று மாலையை கழற்றி விரதத்தை தற்காலிகமாக நிறுத்திவிடவேண்டும்.

விலக்கு நின்றபின், தலைக்கு 3 எண்ணை கூட்டி குளிப்பதுடன், மஞ்சள் நீரிலும் நீராடி அதன்பின் மாலையை பாலிலும் அதன்பின் மஞ்சள் நீரிலும் கழுவி சாம்பிராணி புகை காட்டி வீட்டிலேயே சுவாமி படத்தின் முன் நின்று வணங்கி, மறுபடியும் மாலையை அணிந்து கொண்டு விரதத்தை தொடரலாம். தீமிதி நாளன்று தீக்குண்டத்தில் இறங்கி வெளிவந்து அம்மனை தரிசனம் செய்வார்கள்.

இதேபோல் ஆடி மாதம் முழுக்க பயபக்தியுடன் மேல்மலையனூரில் அங்காளம்மனை பக்தர்கள் வேண்டிக்கொள்வதை காண முடிகிறது.