மூங்கில்துறைப்பட்டு,
கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள மைக்கேல்புரத்தில் பழமை வாய்ந்த புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் தேர்பவனி வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 8 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து தினமும் மாலை நேரத்தில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் கூட்டுத் திருப்பலி நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி நேற்று இரவு நடைபெற்றது. முன்னதாக பங்குத்தந்தை ஆரோக்கியரட்சகர் தலைமையில் கூட்டு திருப்பலியும் பிரார்த்தனையும் நடைபெற்றது. இதனை அடுத்து இரவு 12 மணி அளவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேர்களில் வனத்துசின்னப்பர், புனித அந்தோணியார், ஆரோக்கியமாதா, அன்னைதெரசா, காவல்சம்மனசு, செபஸ்தியார், மரியாள், குழந்தை இயேசு உள்ளிட்ட சொரூபங்கள் வைக்கப்பட்டு தேர்பவனி நடைபெற்றது. முக்கிய வீதி வழியாகச் சென்ற தேர்கள் மீண்டும் ஆலயத்திற்கு வந்தடைந்தன. இதில் மைக்கேல்புரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.