கன்னியாகுமரி,
கன்னியாகுமரி அருகே உள்ள முட்டப்பதியில் அய்யா வைகுண்டசாமி கோவில் உள்ளது. இதுஅய்யா வைகுண்டசாமியின் பஞ்சபதிகளில் ஒன்றாகும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி வரை நடக்கிறது.
முதல் நாளான இன்று அதிகாலை 5.30 மணிக்கு திருக்கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி பிச்சிப்பூ மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கொடிப்பட்டம் மேளதாளம் முழங்க பதியை சுற்றி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. பின்னர் மங்கள இசை சங்குநாதம் முழங்க "அய்யா ஹரஹர சிவசிவா" என்று பக்தர்கள் சரண கோஷம் எழுப்ப, கொடியேற்றப்பட்டது. இந்நிகழ்வில் திரளான அய்யாவழி பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
கொடியேற்றத்தைத் தொடர்ந்து முட்டப்பதி திருபாற்கடலில் அய்யாவழி பக்தர்கள் தீர்த்தமாடி பதமிடும் நிகழ்ச்சிநடந்தது. அதன்பின்னர் உச்சிப்படிப்பு, அன்னதர்மம் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. இரவு 7.30 மணிக்கு அய்யா கருட வாகனத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றி மேளதாளங்கள் முழங்க வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
2-ம்திருவிழாவான நாளை (28-ந்தேதி) முதல் 7-ம்திருவிழாவான அடுத்த மாதம் (ஏப்ரல்) 2-ந்தேதி வரை தினமும் பணிவிடைகள், உச்சிப் படிப்பு, தர்மங்கள் மற்றும் இரவு வாகன பவனி போன்றவை நடக்கிறது.
2 மற்றும் 3-ம் திருவிழா அன்று இரவு 7.30 மணிக்கு அய்யா கருட வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சியும், 4 மற்றும் 5-ம் திருவிழா அன்று இரவு 7.30 மணிக்கு அன்ன வாகனத்தில் அய்யா பவனி வரும் நிகழ்ச்சியும், 6-ம் திருவிழா அன்று இரவு 7.30 மணிக்கு சர்ப்ப வாகனத்தில் அய்யா பவனி வரும் நிகழ்ச்சியும், 7-ம் திருவிழா அன்று இரவு 7.30 அய்யா கருட வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
8-ம் திருவிழாவான 3-ந்தேதி இரவு அய்யா வைகுண்டசாமி முட்டப்பதி கடலில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடக்கிறது. இதையொட்டி அன்று அதிகாலை 4மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும் அதைத்தொடர்ந்து உகப்படிப்பும் நடக்கிறது. பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, பால்அன்னதர்மம் நடக்கிறது.
இரவு 7 மணிக்கு அய்யா வைகுண்டசாமி பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் எழுந்தருளி கோவிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக புறப்பட்டு ஒற்றையால்விளை, மாதவபுரம் வழியாக மீண்டும் முட்டப்பதி வரை பவனி வந்து வடக்கு வாசலுக்கு எதிரே அமைந்து உள்ள கடலில் கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 11 மணிக்கு அன்னதர்மம் நிகழ்ச்சி நடக்கிறது.
9 மற்றும் 10-ம் திருவிழாவான 4 மற்றும் 5-ந் தேதிகளில் இரவு7.30 மணிக்கு சப்பர வாகனத்தில் அய்யா எழுந்தருளி கோவிலை சுற்றி பவனி வருகிறார். 11-ம் திருவிழாவான ஏப்ரல் 6-ந்தேதி பகல் 12 மணிக்கு அய்யா தேரில் எழுந்தருளி பதியை சுற்றி வலம் வரும் தேரோட்ட நிகழ்ச்சி நடக்கிறது. மறுநாள் (7-ந்தேதி) அதிகாலை 4 மணிக்கு திருக்கொடி இறக்க நிகழ்ச்சியும் தான தர்மங்களும் நடக்கின்றன. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை முட்டப்பதி மூத்த தர்மகர்த்தா மனோகர செல்வன், தர்மகர்த்தா கே. எம். கைலாஷ் ஆகியோர் செய்து வருகிறார்கள்.