நாக சதுர்த்தி பூஜை 
ஆன்மிகம்

இன்று நாக சதுர்த்தி: வீட்டிலேயே எளிய பூஜை.. ஒரு டம்ளர் பால் போதும்

நாக சதுர்த்தி தினமான இன்று நாகாபரணம் சூழ்ந்திருக்கும் தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்ய பால் வாங்கி கொடுக்கலாம்.

நாக தேவதைகளை வழிபடக்கூடிய நாக சதுர்த்தி இன்று கொண்டாடப்படுகிறது. சர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷம், ராகு - கேது தோஷம் என நாகம் தொடர்புயை எந்த தோஷமாக இருந்தாலும், நாக சதுர்த்தி நாளில் நாக தேவதைகளை வழிபட்டால் நீங்கும் என்பது நம்பிக்கை. தோஷங்கள் நீங்குவது மட்டுமின்றி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும், நோய் நொடிகள் நீங்கி ஆரோக்கியமான வாழ்க்கை அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

நைவேத்யம்

இன்றைய தினம் புற்று கோவிலுக்கு சென்று வழிபடலாம். கோவில்களில் உள்ள நாகர் சிலைகளுக்கு அபிஷேகம் செய்வது வழிபடலாம். அதற்கு வீட்டில் இருந்து பால், மஞ்சள், தண்ணீர் எடுத்துச் செல்ல வேண்டும். முதலில் நாகர் சிலைக்க தண்ணீர் ஊற்றி அபிஷேகம் செய்யவேண்டும். அதன்பின் பால், மஞ்சள் அபிஷேகம் செய்ய வேண்டும். பின்னர் மீண்டும் தண்ணீர் ஊற்றி அபிஷேகம் செய்ய வேண்டும்.

அதன்பின் எளிமையான பொருட்களை நைவேத்யம் செய்து வழிபடலாம். கருப்பு உளுந்து, கொள்ளு சுண்டல் நைவேத்யம் செய்வது நல்லது. காய்ச்சிய பாலில் வெல்லம் அல்லது தேன் கலந்து நைவேத்யம் செய்யலாம். பூஜைக்கு பின்னர் அவற்றை பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கலாம்.

நாக சதுர்த்தி பூஜை

வீட்டில் பூஜை செய்வது எப்படி?

கோவிலுக்கு செல்ல இயலாதவர்கள் வீட்டிலேயே எளிய முறையில் நாகர்களுக்கு பூஜை செய்யலாம். நாகர் சிலைக்கு பால், மஞ்சள் அபிஷேகம் செய்து அந்த பாலை மரத்தடியில் மண்ணில் ஊற்ற வேண்டும். நகர்ப்புறங்களிலோ அல்லது வெளிநாடுகளிலோ இருப்பவர்களுக்கு மரங்கள் இல்லாத நிலையில், வீட்டில் வளர்க்கப்படும் சிறு செடியில் உள்ள மண்ணில் படும்படி சிறிதளது அபிஷேக பாலை ஊற்றினால் போதும்.

நாகர் சிலை இல்லாதவர்கள், நாகர்களுக்கு அபிஷேகம் செய்து பூஜை செய்ய முடியவில்லையே என்று கவலைப்பட தேவையில்லை. வீட்டில் சாமி படத்தின் முன்பு ஒரு டம்ளர் பால் வைத்து நைவேத்யம் செய்து, நாக தேவதைகளை மனதார நினைத்து வழிபடலாம். பின்னர் அந்த நைவேத்ய பாலில் சிறிதளவை செடிக்கு ஊற்றலாம்.

அபிஷேகம்

கோவில்களில் பெரும்பாலான தெய்வங்களுக்கு நாகாபரணம் இருக்கும். இவ்வாறு நாகாபரணம் சூழ்ந்திருக்கும் தெய்வங்களுக்கு இன்று அபிஷேகம் செய்ய பால் வாங்கி கொடுக்கலாம். இவ்வாறு செய்வதன்மூலம் தெய்வத்திற்கும் நாகத்திற்கும் ஒரே சமயத்தில் அபிஷேகம் செய்த பலன் கிடைக்கும்.