நாகப்பட்டினம்,
கந்தூரி விழாவை முன்னிட்டு நாகூர் தர்கா சந்தனக்கூடு ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நாகை மாவட்டம் நாகூரில் புகழ்பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டு கந்தூரி விழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 17-ந் தேதி வாணவேடிக்கை நிகழ்ச்சியும், 18-ந் தேதி பீர்வைக்கும் நிகழ்ச்சியும் நடந்தது.
நேற்று இரவு சந்தனக்கூடு ஊர்வலம் நடந்தது. நாகை அபிராமி அம்மன் கோவில் வாசலில் இருந்து இசை வாத்தியங்களுடன் சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டது. அப்போது சாம்பிராணி சட்டி ரதம், நகரமேடை மற்றும் பல்வேறு மின் அலங்கார தட்டிகள் சந்தன கூட்டின் முன்னும், பின்னும் அணிவகுத்து சென்றன.
ஊர்வலம் நாகை புதுப்பள்ளிதெரு வழியாக யாஹீசைன் தெரு, நூல் கடை தெரு, வெங்காயக்கடை தெரு, பெரிய கடை தெரு. சர்அகமது தெரு உள்பட பல்வேறு தெருக்களின் வழியாக சென்றது. பின்னர் அண்ணா சிலை, பப்ளிக் ஆபீஸ் ரோடு வழியாக சென்று நாகூரை அடைந்தது. சந்தனக்கூடு ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஊர்வலத்தின்போது சாலையின் இருபுறமும் திரளானோர் கூடி நின்று பெரிய ரதத்தின் மீது பூக்களை வீசி பிரார்த்தனை செய்தனர். ஊர்வலம் நாகூர் மெயின்ரோட்டை வந்தடைந்ததும் அங்குள்ள கூட்டுப்பாத்திகா மண்டபத்தில் பாத்திகா ஓதப்பட்டது. பின்னர் பாரம்பரிய முறைகாரர் வீட்டில் சந்தனக்குடத்தை வாங்கி சந்தனக்கூட்டில் வைத்து செய்யது பள்ளிவாசல் தெரு வழியாக சென்று சந்தன மகாலை அடைந்தது. தொடர்ந்து தர்காவின் கால்மாட்டு வாசல் வழியாக சந்தனக்குடம் தர்காவுக்குள் கொண்டு செல்லப்பட்டது.
விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனம் பூசும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதற்காக இன்று அதிகாலை சந்தனக்குடங்கள் தர்காவில் உள்ள ஆண்டவரின் சமாதி அறைக்கு கொண்டு செல்லப்பட்டு துவா ஓதப்பட்டது. தொடர்ந்து ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சந்தனம் பூசும் நிகழ்ச்சியை முன்னிட்டு இன்று நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.