திருமலை,
நாக சதுர்த்தியை முன்னிட்டு திருமலையில் நாளை மறுநாள் பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
நாக தேவதைகளை வழிபடுவதற்கான நாக சதுர்த்தி நாளை மறுதினம் (13.11.2026) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு கோவில்களில் நாக தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும். நாகர் சிலைகளுக்கும், புற்றுகளுக்கும் பக்தர்கள் பால் ஊற்றி அபிஷேகம் செய்து வழிபடுவார்கள். நாக தேவதைகளுக்கு பால் மற்றும் பழங்களை படைத்தும் வழிபடுவார்கள்.
நாக சதுர்த்தியை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு உற்சவம் நடைபெறும். ஆதிசேஷனின் வடிவமாக கருதப்படும் பெரிய சேஷ வாகனத்தில் உற்சவர் மலையப்ப சுவாமி, தேவியருடன் எழுந்தருளி, கோவிலின் நான்க மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இந்நிகழ்வு நடைபெறும். இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்வார்கள்.
இந்த சேஷ வாகன ஊர்வலம், 'சரணாகதி' தத்துவத்தை உணர்த்துகிறது. நாகராஜனான ஆதிசேஷன், தனது இறைவனுக்குப் படுக்கையாகவும், ஆபரணமாகவும், குடையாகவும் (நிழல் தருபவனாகவும்) எனப் பல வகைகளில் தொண்டாற்றி, தனது மாறாத விசுவாசத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
திருமலையில் நடைபெறும் பல்வேறு பிரம்மோற்சவ வாகன சேவைகளில், முதல் வாகனமாகத் திகழும் 'பெரிய சேஷ வாகனம்' முக்கியத்துவம் பெறுகிறது.