நாமக்கல்,
நன்செய் இடையாறு சங்கிலி கருப்பண்ணசாமி கோவில் கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா, நன்செய் இடையாறு காவேரி ஆற்றங்கரை அருகே சங்கிலி கருப்பண்ணசாமி கோவில் உள்ளது. இங்கு மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி, விநாயகர், பாலமுருகன், பொன்னாச்சி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் அருள்பாலிக்கிறார்கள். இக்கோவிலில் கும்பாபிஷேகம் செய்ய தீர்மானிக்கப்பட்டு அதற்கான திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இப்பணிகள் நிறைவு பெற்றதையடுத்து நேற்று முன்தினம் (15.9.2026) செவ்வாய்க்கிழமை காலை கும்பாபிஷேக விழா தொடங்கியது. அன்றைய தினம் காலை 6:00 மணிக்கு மேல் மங்கள இசை, மகாலட்சுமி யாகம் நடைபெற்றது. காலை 8 மணிக்கு மேல் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்தக் குடங்களுடன் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.
மாலை 5 மணிக்கு மேல் முளைப்பாரி அழைத்தல் நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு மேல் முதல் கால யாக பூஜையும் நடைபெற்றது. நேற்று (16.9.2026) புதன்கிழமை காலை 9 மணிக்கு மேல் இரண்டாம் கால யாக பூஜையும், மாலை 6 மணிக்கு மேல் மூன்றாம் கால யாக பூஜையும், மாலை 6:30 மணிக்கு மேல் கோபுர கலசம் வைத்தல் நிகழ்ச்சியும், இரவு 10.30 மணி அளவில் அஷ்டபந்தனம் (மருந்து சாற்றுதல்) நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இன்று (17.9.2026) வியாழக்கிழமை அதிகாலை 5.30 மணி அளவில் 4ஆம் கால யாக பூஜையும், காலை 8.45 மணிக்கு மேல் யாத்ரா தானம், கடம் புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து காலை 9 மணிக்கு மேல் சங்கிலி கருப்பண்ணசாமி, பொன்னாச்சி அம்மன், விநாயகர், பாலமுருகன் மற்றும் பரிவார தெய்வங்களின் கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதி புனித நீரூற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.
அதனை தொடர்ந்து சங்கிலி கருப்பண்ணசாமி, பொன்னாச்சி அம்மன், விநாயகர், பாலமுருகன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவில் நாமக்கல், கரூர், ஈரோடு, சேலம், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.