ஆன்மிகம்

திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம்: அனுமன், யானை வாகனங்களில் மலையப்பசாமி வீதிஉலா

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது.

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவில் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 6-வது நாளான நேற்று காலை அனுமன் வாகன வீதிஉலா, இரவு யானை வாகன வீதிஉலா நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

கோதண்டராமர் அலங்காரம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 6-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை அனுமன் வாகன வீதிஉலா நடந்தது. மலையப்பசாமி 'கோதண்டராமர் அலங்காரத்தில் அனுமன் வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அனுமன் தூய பக்தி, தன்னலமற்ற சேவை, பணிவு மற்றும் தனது இறைவனிடம் முழுமை யான சரணாகதி ஆகியவற்றின் அடையாளமாக திகழ்கிறார். இந்த வாகன வீதி உலா, மேன்மையான நடத்தையும், அசைக்க முடியாத பக்தியும், ஒருவரை இறைத்தன்மையை நோக்கி அழைத்துச் செல்லும் என்பதை பக்தர்களுக்கு உணர்த்துகிறது.

கலை நிகழ்ச்சிகள்

வாகன வீதிஉலா முன்னால் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கலைஞர்கள் தங்கள் துடிப்பான பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளால் பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தனர். மொத்தம் 25 கலை குழுக்களை சேர்ந்த 516 கலைஞர்கள், மாட வீதிகளில் பாரம்பரிய நடனங்கள், நாட்டுப்புற கலைகள், இசை மற்றும் வாத்திய நிகழ்ச்சிகளை வழங்கினர். இது, வாகன வீதிஉலாவுக்கு மிகுந்த பக்தி மற்றும் கலாசார சிறப்பை சேர்த்ததாக இருந்தது.

கலை நிகழ்ச்சியில் கர்நாடகத்தின் 'ராமபக்த அனுமந்த' குழு, திருப்பதியின் பரதநாட்டியக் குழு, சிக்கிமின் 'மருனி' நடனக் குழு மற்றும் தெலுங்கானாவின் 'கொம்முக்கோயா' நாட்டுப்புற கலைக்குழு ஆகிய 4 சிறந்த கலைக்குழுக்களை திருப்பதி தேவஸ்தான அதிகாரி முத்தாடா ரவிச்சந்திரா கவுரவித்தார்.

யானை வாகன வீதிஉலா

தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை யானை வாகன வீதிஉலா நடந்தது. அதில் மலையப்பசாமி எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். யானை வாகனம், கர்ம வினைகளில் இருந்து விடுதலைக்கான அடையாளமாகும்.

பண்டைய காலங்களில் மன்னர்களின் பட்டாபிஷேகம் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளில் யானைகள் மீது மன்னர்கள் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். சிறப்பு வாய்ந்தவர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சிகளிலும் யானைகள் மீது ஏற்றி அழைத்துச் செல்லும் பாரம்பரியம் இருந்தது. புராணங்களின்படி மலையப்பசாமியின் யானை வாகன வீதிஉலாவை தரிசிப்பதன் மூலம் கர்ம வினைகளில் இருந்து விடுதலை கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். இதை உணர்த்தவே மலையப்பசாமி யானை வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்தார். மாடவீதிகளில் அமர்ந்திருந்த திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

SCROLL FOR NEXT