திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நேற்று தொடங்கியது. முதல் நாளில் தங்க திருச்சி வாகனம் மற்றும் பெரிய சேஷ வாகனத்தில் உபயநாச்சியார்களுடன் மலையப்ப சுவாமி உலா வந்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 9 நாட்கள் நடக்கும் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. இந்தப் பிரம்மோற்சவ விழா 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிகமாதம் வருவதால், அஸ்வயுஜ (தசரா) மாதத்தில் நடக்கும்.
சிறப்பு அம்சமாக நவராத்திரி பிரம்மோற்சவத்தில் கொடியேற்றம், பெரிய தேரோட்டம், கொடியிறக்கம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்காது. பிரம்மோற்சவ விழாவின் "சிகர" நிகழ்ச்சியாக கருட வாகன வீதிஉலா மட்டும் மாலை 6.30 மணியில் இருந்து இரவு 11.30 மணி வரை நடக்கும்.
அவ்வகையில் இந்த ஆண்டின் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் முதல் நாளான நேற்று காலை 9 மணியில் இருந்து 11 மணி வரை தங்கத் திருச்சி வாகன வீதிஉலா நடைபெற்றது. இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை பெரிய சேஷ வாகன வீதிஉலா நடந்தது. கோவிந்தராஜ சுவாமி அலங்காரத்தில் உற்சவர் மலையப்ப சுவாமி தனது தேவியர்களுடன் பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வாகன வீதிஉலாவில் திருமலை பெரிய ஜீயர் சுவாமி, சின்ன ஜீயர் சுவாமி, தேவஸ்தான அதிகாரி முத்தாடா. ரவிச்சந்திரா, கூடுதல் அதிகாரி வெங்கையா சவுத்ரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 2-வது நாளான இன்று (செவ்வாய்க் கிழமை) காலை 8 மணியில் இருந்து 10 மணி வரை சிறிய சேஷ வாகன வீதிஉலா நடைபெற்றது. இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரை ஹம்ச வாகன வீதி உலா நடக்கிறது.