சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமியை வழிபட்ட பக்தர்கள் 
ஆன்மிகம்

திருப்பதி பிரம்மோற்சவம்: சிம்ம வாகனத்தில் யோக நரசிம்மர் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

வாகன சேவையின்போது, மாட வீதிகளில் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள், பகவானை தரிசனம் செய்தனர்.

திருமலை,

திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவ விழாவில் இன்று மலையப்ப சுவாமி யோக நரசிம்மர் அலங்காரத்தில் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோவில்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. முதல் நாள் காலை 9 மணியில் இருந்து 11 மணி வரை தங்கத் திருச்சி வாகன வீதிஉலா, இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை பெரிய சேஷ வாகன வீதிஉலா நடந்தது.

2-வது நாளான நேற்று (செவ்வாய்க் கிழமை) காலை 8 மணியில் இருந்து 10 மணி வரை சிறிய சேஷ வாகன வீதிஉலா நடைபெற்றது. இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரை ஹம்ச வாகன வீதி உலா (அன்ன வாகனம்) நடைபெற்றது.

யோக நரசிம்மர் திருக்கோலத்தில் மலையப்ப சுவாமி

சிம்ம வாகனத்தில்...

மூன்றாம் நாளான இன்று காலையில் சிம்ம வாகன சேவை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகனத்தில், யோக நரசிம்மர் திருக்கோலத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி, மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது மாட வீதிகளில் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திருமலை பெரிய ஜீயர் சுவாமிகள், சின்ன ஜீயர் சுவாமிகள், திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி முத்தாடா ரவிச்சந்திரா, கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கையா சவுத்ரி, வாரிய உறுப்பினர்கள் பானுபிரகாஷ் ரெட்டி, ஜானகி தேவி, ரங்கஸ்ரீ, சாந்தாராம், தலைமை விஜிலென்ஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரி முரளி கிருஷ்ணா, கோவில் துணை நிர்வாக அதிகாரி பாஸ்கர் மற்றும் பிற அதிகாரிகள் வாகன சேவையில் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT