வாணியம்பாடி,
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி - சென்னாம்பேட்டை பகுதியில் பாலாற்றங்கரையில் உள்ள பழமையான பாண்டுரங்கன் கோவிலில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது.
நவராத்திரி விழாவையொட்டி தினந்தோறும் சிறப்பு அலங்காரங்களும் வழிபாடுகளும் நடைபெற்றன. விழாவின் சிறப்பம்சமாக கொலு அமைக்கப்பட்டிருந்தது. இதில், இந்து சமய நம்பிக்கைகள், புராணங்கள் மற்றும் வரலாற்று நிகழ்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு கொலு பொம்மைகள் அழகுற அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக, திருமாலின் மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனம் உள்ளிட்ட தசாவதாரக் காட்சிகள் பக்தர்களை வெகுவாக கவர்ந்தன.
விநாயகரின் பல்வேறு திருக்கோலங்கள், சப்த கன்னியர்கள், கிருஷ்ணரின் குழந்தைப் பருவ லீலைகள், ராமாயணக் காட்சிகள், சேது பாலம், அசோகவனம், ராவணன் தர்பார், கும்பகர்ணன் உருவம் உள்ளிட்ட பல்வேறு புராணக் காட்சிகளும் இடம்பெற்றிருந்தன.
63 நாயன்மார்களில் கண்ணப்ப நாயனார் திருவிளையாடல் காட்சிகள், நடராஜரின் ஊர்த்துவ தாண்டவம், கைலாசம், திருப்பாற்கடல், முருகப்பெருமானின் அறுபடை வீடுகள், பூரி ஜெகந்நாதர் கோயில், ஆதிசங்கரர், சபரிமலை ஐயப்பன் வரலாறு உள்ளிட்ட பல்வேறு ஆன்மிகக் காட்சிகளும் இடம்பெற்றிருந்தன.
இதனுடன், திருமணம் முதல் சீமந்தம் வரையிலான பாரம்பரியச் சடங்குகள், சுமங்கலி பூஜை, பாண்டுரங்கனின் பண்டரிபுர விழா மற்றும் சத்யநாராயண பூஜை உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளையும் கொலு பொம்மைகள் வாயிலாகத் தத்ரூபமாகக் காட்சிப்படுத்தியிருந்தனர்.
இந்தக் கண்கவர் கொலு பொம்மைகளைக் காண தினமும் ஏராளமான பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்ததுடன், கொலு காட்சிகளையும் கண்டு ரசித்தனர்.