பகவதி அம்மன் வாகன பவனி 
ஆன்மிகம்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா வாகன பவனி.. திரளான பக்தர்கள் தரிசனம்

வாகன பவனி நிறைவடைந்ததும் கோவிலில் அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சியும் அத்தாழ பூஜையும் ஏகாந்த தீபாராதனையும் நடந்தது.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி விழா மற்றும் வாகன பவனியி‘ல் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

நவராத்திரி விழா

உலகப் புகழ்பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டின் நவராத்திரி விழா நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

2-ம் நாள் திருவிழா நேற்று வணிக வரித்துறை சார்பில் நடந்தது. விழாவின் ஒரு பகுதியாக நேற்று மாலை ஆன்மீக அருள் உரையும் அதைத்தொடர்ந்து வயலின் இன்னிசையும் நடந்தது. இரவு 9 மணிக்கு நெற்றிப்பட்டம் அணிவிக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்ட யானை முன் செல்ல, வெள்ளிக் கலைமான் வாகனத்தில் பகவதி அம்மன் எழுந்தருளி கோவிலின் வெளிப் பிரகாரத்தைச் சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பின்னர் கோவிலின் மேற்கு பக்கம் உள்ள வெளிப்பிரகார மண்டபத்தில் அம்மன் எழுந்தருளி இருந்த வெள்ளி கலைமான் வாகனத்தை மூங்கில் தண்டையத்தில் அமர வைத்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தாலாட்டு பாடலுடன் கூடிய நாதஸ்வர இசையுடன் அம்மனின் வாகன பவனி நிறைவடைந்தது.

விழாவில் பங்கேற்ற அதிகாரிகள்

இந்த நிகழ்ச்சியில் வணிகவரித்துறை இணை ஆணையர் முருககுமார், துணை ஆணையர்கள் வெள்ளையப்பன், முத்துரதி, பாரதிராஜா (சட்டம்), வணிகவரித்துறை மாநிலவரிஅலுவலர்கள் பூபதிராசா, ராமசாமி, விற்பனை மற்றும் வருமான வரி ஆலோசகர் வெங்கடகிருஷ்ணன், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த், கன்னியாகுமரி நகராட்சி வார்டு கவுன்சிலர் சி.எஸ். சுபாஷ், அருள்மிகு கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோவில் பக்தர்கள் சங்க தலைவர் வக்கீல் சிவகுமார் நாகப்பன், செயலாளர் நாயகம், பொருளாளர் பிரகாஷ், கன்னியாகுமரி பகவதி அம்மன் பக்தர்கள் சங்க தலைவர் வேலாயுதம், செயலாளர் முருகன், கன்னியாகுமரி பகவதி அம்மன் பக்தர்கள் நற்பணி சங்க பொருளாளரும் கொட்டாரம் பேரூர் தி.மு.க. செயலாளருமான வைகுண்டபெருமாள், கொட்டாரம் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் வசந்தகுமாரி, மாநில பா.ஜ.க. தன்னார்வ தொண்டு நிறுவன பிரிவு செயலாளர் ஜெயராம், உள்பட பலர் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

நிறைவாக கோவிலில் அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சியும் அத்தாழ பூஜையும் ஏகாந்த தீபாராதனையும் நடந்தது.

இன்றைய நிகழ்ச்சிகள்

3-ம் திருநாளான இன்று அதிகாலை 5 மணிக்கு வருவாய்துறை சார்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் வருவாய்த்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் அதைத்தொடர்ந்து காலை 11-30 மணிக்கு அம்மனுக்கு வைரக்கல் மூக்குத்தி தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனக் காப்பு அலங்காரத்துடன் தீபாராதனையும் நடந்தது. மாலையில் சாயரட்சை தீபாராதனையும் ஆன்மீக அருள் உரையும் நடக்கிறது.

இரவு 7 மணிக்கு பரதநாட்டியமும் 9 மணிக்கு வெள்ளிக் கலைமான் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி கோவிலின் வெளி பிரகாரத்தை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

SCROLL FOR NEXT