கன்னியாகுமரி,
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா விமரிசையாக நடைபெறுகிறது.
உலகப் புகழ்பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டின் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. முதல் நாள் திருவிழாவான நேற்று மாலை மங்கள இசை, ஆன்மீக அருள் உரை, பக்தி இன்னிசைக் கச்சேரி போன்றவை நடைபெற்றன.
இரவு 9 மணிக்கு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளிக் கலைமான் வாகனத்தில் பகவதி அம்மன் எழுந்தருளி கோவிலின் வெளிபிரகாரத்தைச் சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை பவனிவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நெற்றி பட்டம் அணிவித்து அலங்கரிக்கப்பட்ட யானை முன் செல்ல இந்த வாகன பவனி நடந்தது.
3-வது சுற்றின்போது கோவிலின் மேற்கு பக்கம் உள்ள வெளிப்பிரகார மண்டபத்தில் அம்மன் எழுந்தருளி இருந்த வெள்ளி கலைமான் வாகனத்தை மூங்கில் தண்டையத்தில் அமரவைத்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதன்பிறகு இறுதியாக தாலாட்டு பாடலுடன் கூடிய நாதஸ்வர இசையுடன் அம்மனின் வாகன பவனி நிறைவடைந்தது.
வாகன பவனியைத் தொடர்ந்து அம்மமனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சியும் அத்தாழ பூஜையும் ஏகாந்த தீபாராதனையும் நடந்தது. இந்த நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
2-ம்திருவிழாவான இன்று அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் அதைத்தொடர்ந்து காலை 11-30 மணிக்கு அம்மனுக்கு வைரக்கல் மூக்குத்தி அணிவிக்கப்பட்டு தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள்மற்றும் சந்தனக்காப்பு அலங்காரத்துடன் தீபாராதனையும் நடைபெற்றது.
மாலை 6 மணிக்கு ஆன்மீக அருள் உரையும் 6-30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடக்கிறது. இரவு 7 மணிக்கு வயலின் இன்னிசையும் 9 மணிக்கு வெள்ளிக் கலைமான் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி கோவிலின் வெளி பிரகாரத்தை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.