ஆன்மிகம்

நவராத்திரி விழா: திருவனந்தபுரம் புறப்பட்ட சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் - துப்பாக்கி ஏந்திய போலீசார் மரியாதை

நவராத்திரி விழா வருகிற 11-ந்தேதி தமிழகத்தில் தொடங்கும் நிலையில் கேரளத்தில் 12-ந்தேதி தொடங்க இருக்கிறது.

கன்னியாகுமரி,

திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில் பங்கேற்க சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் புறப்படும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் இரு மாநில போலீசார் துப்பாக்கி ஏந்தி மரியாதை செலுத்தினர்.

நவராத்திரி விழா

திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில் கலந்து கொள்வதற்காக கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன், பத்மநாபபுரம் தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய சாமி சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா வருகிற 11-ந்தேதி தமிழகத்தில் தொடங்கும் நிலையில் கேரளத்தில் 12-ந்தேதி தொடங்க இருக்கிறது.

இதையொட்டி சுசீந்திரம் முன்னுதித்த நங்கையம்மன் ஊர்வலமாக திருவனந்தபுரம் புறப்படும் நிகழ்ச்சி இன்று நடந்தது. கோவிலில் தினமும் நடைபெறும் நித்திய காரிய பூஜைகள் முடிந்த பிறகு அம்மன் புதிய பட்டு அணிவிக்கப்பட்டு காலை 9.15 மணிக்கு பல்லக்கு வாகனத்தில் எழுந்தருளினார்.

போலீசார் மரியாதை

தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டு கோவிலில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டார். அப்போது தமிழக மற்றும் கேரள போலீசார் அணிவகுத்து நின்று துப்பாக்கி ஏந்தி மரியாதை செலுத்தினர்.

தாணுமாலயசாமி கோவில் முன்பு முன்னுதித்த நங்கை அம்மன் வந்தபோது கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து 4 ரத வீதிகளிலும் அம்மன் உலா வந்த நிகழ்ச்சி நடந்தது. அப்போது பக்தர்கள் தங்களது வீடுகளின் முன்பு திருவிளக்கேற்றி திருக்கண் சார்த்தி மலர் தூவி அம்மனை வழி அனுப்பினர்.

SCROLL FOR NEXT