நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை சந்திப்பு கைலாசபுரம் கைலாசநாதர் சுவாமி கோவிலில் வைகாசி திருவிழா கடந்த 16-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் பல்வேறு வாகனங்களின் எழுந்தருளி திருவீதி உலா நடந்தது.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் திருநாளான நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு கைலாசநாதர்- சவுந்தரவல்லி அம்பாள், பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சுவாமி கைலாசநாதர் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் நமச்சிவாய கோஷம் முழங்க பஞ்ச வாத்தியம் இசைக்க தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர். ரதவீதிகளில் வலம் வந்த தேர் மீண்டும் நிலையை வந்தடைந்தது. தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று (திங்கட்கிழமை) தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெறுகிறது.