களக்காடு,
நெல்லை மாவட்டத்தில் பிரசித்திப் பெற்ற களக்காடு வரதராஜபெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பிரம்மோற்சவ திருவிழா 11 நாட்கள் வெகுவிமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா இன்று தொடங்கியது.
முதல் நாளான இன்று காலை கொடியேற்றம் நடந்தது. இதையொட்டி வரதராஜபெருமாள், தேவியர்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அதனைதொடர்ந்து வரதராஜ பெருமாள், தேவியர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். முன்னதாக கொடி பட்டம் பல்லக்கில் வைக்கப்பட்டு, ரத வீதிகளில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கோவிலை அடைந்தது. பின்னர் சிறப்பு பூஜை செய்து, கோவில் கொடி மரத்தில் திருக்கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
விழா நாட்களில் தினசரி காலையில் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், இரவில் பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வருதலும் நடக்கிறது. 7ம் நாளான வருகிற 30ம் தேதி மாலை திருக்கல்யாண வைபவமும், 8ம் நாளான வருகிற 31ம் தேதி பெருமாள் குதிரை வாகனத்தில் பவனி வருதலும் நடக்கிறது.
10ம் நாளான ஏப்ரல் 2ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. அன்று மாலை 5 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது.