நெல்லை,
நெல்லை டவுன் தொண்டர் நயினார் கோவில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களில் ஒன்றான நூற்றாண்டு பழமை வாய்ந்த தொண்டர் நயினார் கோவில், நெல்லை டவுனில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் பெயரால் அந்த பகுதி தொண்டர் சன்னதி என்று பெயர் பெற்று விளங்குகிறது.
இந்த கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று, நிறைவு பெற்ற சூழலில் கும்பாபிஷேகத்துக்கான பூர்வாங்க பூஜைகள் கடந்த 26-ந்தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கின. தொடர்ந்து பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு 30-ந்தேதி மாலை முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து யாகசாலை பூஜை, மருந்து சாத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நேற்று அதிகாலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. இந்த பூஜையின் நிறைவில் தீபாராதனை நடைபெற்று, புனித நீர் கலசங்கள் கோவிலுக்கு ஊர்வலமாக மேளதாளம் முழங்க எடுத்து வரப்பட்டன. பின்னர் கோவில் கோபுரம், விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. விமான கும்பாபிஷேகம் நிறைவு பெற்றவுடன் கோமதி அம்பாள் சமேத தொண்டர் நயினார் மூலவருக்கும் மகா அபிஷேகம் நடந்தது.
கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மாலையில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.