நெல்லை,
நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகின்றன. சமீபத்தில் ஆனிப்பெருந்திருவிழா தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து ஆடிப்பூரம் மற்றும் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாக்கள் நடைபெற உள்ளன.
இதில் ஆடிப்பூர திருவிழா நேற்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல் வழிபாடு, கோபூஜை மற்றும் கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
பின்னர் கொடிப்பட்டம் கோவிலுக்குள் வீதி உலாவாக எடுத்து வரப்பட்டு அம்பாள் சன்னதி முன் அமைந்துள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அந்த கொடிமரத்திற்கு மஞ்சள், பால், தயிர், இளநீர், சந்தனம் போன்ற திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
10 நாட்கள் நடக்கும் திருவிழாவில் தினமும் காந்திமதி அம்பாளுக்கு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடக்கின்றது.
வருகிற 12-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 4-வது திருநாளில் மதியம் காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு உற்சவம், 18-ந் தேதி மாலையில் ஊஞ்சல் மண்டபத்தில் அம்பாளுக்கு ஆடிப்பூர முளைக்கட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது.