திருநெல்வேலி:
திருநெல்வேலி நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று (22.3.2026) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, இன்று அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதன்பின்னர் கொடி பட்டத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு பல்லக்கில் வைத்து கோவில் வளாகத்தில் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
பின்னர் கொடி மரத்திற்கு பூஜை செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. அதன்பின் மேளதாளங்கள் முழங்க வேத மந்திரங்கள் ஓதப்பட்டு முழங்க, கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. கொடி மரத்திற்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
பங்குனி உத்திர திருவிழா 10 நாட்கள் நடைபெறும். விழாவில் தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. சுவாமி வீதியுலா நிகழ்ச்சிகளும் நடைபெறும்
4ஆம் திருநாளான மாா்ச் 25ல் காலை 10 மணிக்கு மேல் 12 மணிக்குள் வேணுவனநாதா் தோன்றிய வரலாறு வாசித்தல் நிகழ்வும், இரவு 7 மணிக்கு சுவாமி -அம்பாள் பஞ்ச மூா்த்திகளுடன் திருவீதியுலாவும் நடைபெறும். 10 ஆம் திருநாளான 31-ம் தேதி மாலை 6.30 மணிக்கு மேல் இரவு 7.30 மணிக்குள் அம்பாள் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் பங்குனி உத்திரம் செங்கோல் விழா நடைபெற உள்ளது.