விநாயகர் திருவிழா கொடியேற்றம் 
ஆன்மிகம்

நெல்லையப்பர் கோவில் ஆனிப் பெருந்திருவிழா... விநாயகர் சன்னதியில் கொடியேற்றம்

விநாயகர் திருவிழாவில் தினமும் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள், உட்பிரகாரத்தில் வீதியுலா நடைபெறும்.

நெல்லை:

நெல்லை டவுனில் புகழ்பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆனிப் பெருந்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். விழாவின் சிகர நிகழ்வாக ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட சுவாமி தேர் உள்ளிட்ட 5 தேர்கள் ரத வீதிகளில் உலா வரும் நிகழ்வு பிரமாண்டமாக நடத்தப்படும். தேரோட்டத்தைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

பந்தக்கால்

அவ்வகையில் இந்த ஆண்டின் ஆனிப் பெருந்திருவிழாவிற்கான தொடக்கமாக கடந்த மாதம் 29-ம்தேதி பந்தக்கால் நடப்பட்டது. அன்றைய தினம் அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடந்தன. விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடத்தி, பந்தக்காலுக்குப் புதிய வஸ்திரம் அணிவித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் வாத்தியங்கள் முழங்க பந்தக்காலை ஊர்வலமாக எடுத்து வந்து, கோவில் வாசல் மண்டபத்தில் நடப்பட்டது. அதனைத் தொடர்ந்து பந்தக்காலுக்கு மஞ்சள் மற்றும் பால் போன்ற திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. நவதானியங்களைத் தூவி மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பந்தக்கால் நட்டதைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் திருவிழாவிற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கின.

கொடியேற்றம்

அலங்கார பந்தல் அமைக்கும் பணி, தேர் சீரமைப்பு மற்றும் தேருக்கு தேவையான பொருட்களை உருவாக்கும் பணிகளும் நடைபெறுகின்றன.

இந்நிலையில் விநாயகர் திருவிழா கொடியேற்றம் இன்று விமரிசையாக நடைபெற்றது. கொடியேற்ற நிகழ்வை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் கொடிபட்டம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. மூலஸ்தானத்திற்கு எதிரே உள்ள கொடிமரத்தில் கொடிபட்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு விநாயகர் கொடியேற்றம் நடைபெற்றது. இந்த திருவிழாவில் காலை, மாலை 2 வேளைகளிலும் விநாயகருக்கு சிறப்பு பூஜைகளும், உட்பிரகாரத்தில் வீதியுலாவும் நடைபெறும்.

தேரோட்டம்

இந்த விநாயகா் திருவிழா கொடியேற்றத்தை தொடா்ந்து ஆனி பெருந்திருவிழாவிற்கான அழைப்பிதழ் அச்சடித்தல், பந்தல் அமைக்கும் பணி தொடங்குதல், தேர்களை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடங்க இருக்கின்றன.

அதன்பின்னர் ஆனித்தேர் திருவிழா, 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்றிலிருந்து 9வது நாளான 28ம் தேதி விழாவின் சிகர நிகழ்வான ஆனித் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெறும்.