திருப்பதி லக்கேஜ் கவுண்டர் 
ஆன்மிகம்

திருப்பதியில் லக்கேஜ் பாதுகாப்பில் புதிய சாதனை... 2 மாதங்களில் 51 லட்சம் பேர் பயன்

கவுண்டர்களில் ஒப்படைக்கும் உடைமைகளை பக்தர்கள் திருமலையில் உள்ள குறிப்பிட்ட மையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களிடம் உடைமைகளை பெற்று பாதுகாப்புடன் ஒப்படைக்கும் தேவஸ்தானத்தின் இலவச சேவையை கடந்த 2 மாதங்களில் 51 லட்சத்து 38 ஆயிரத்து 976 பேர் பயன்படுத்தியுள்ளனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் கோடிக்கணக்கான பக்தர்களின் உடைமைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, லக்கேஜ் கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருமலை திருப்பதி தேவஸ்தானம் விரிவான மற்றும் நவீன 'லக்கேஜ் டெபாசிட் டெலிவரி சிஸ்டம்' மூலம் இந்த வசதியை செயல்படுத்தி வருகிறது.

66 கவுண்டர்கள்

திருமலை மற்றும் அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழித்தடங்களில் மொத்தம் 66 கவுண்டர்களை அமைத்து 345 பணியாளர்களை நியமித்து 3 ஷிப்டுகளாக 24 மணி நேரமும் இடையறாத சேவையை வழங்கி வருகிறது. பக்தர்கள் தங்களின் உடைமைகள் மற்றும் செல்போன்களை பாதுகாப்பாக ஒப்படைத்து, தரிசனம் மற்றும் நடைபாதை யாத்திரையை கவலையின்றி மேற்கொள்ள இந்த வசதி உதவுகிறது.

இந்த கவுண்ட்டர்களில் ஒப்படைக்கும் உடைமைகளை பக்தர்கள் திருமலையில் உள்ள குறிப்பிட்ட மையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

திருப்பதி லக்கேஜ் கவுண்டர்

கியூ.ஆர்.கோடு

முக அடையாள உதவியுடன் கூடிய கியூ.ஆர். குறியீட்டு முறை மூலம் தேவஸ்தானம் இந்த சேவைகளை வழங்குகிறது. பக்தர்களால் ஒப்படைக்கப்படும் ஒவ்வொரு பொருளுக்கும் கியூ.ஆர்.ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு, விவரங்களுடன் கூடிய ரசீது வழங்கப்படுகிறது.

அந்த ரசீதைக் காட்டினால், பணியாளர்கள் குறிப்பு எண்ணின் மூலம் பொதுவாக ஒரு நிமிடத்திற்குள் பொருளை கண்டறிந்து பக்தர்களிடம் ஒப்படைக்கின்றனர். இந்த சேவைகள் அனைத்தும் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.

லக்கேஜ்களை ஸ்கேன் செய்யும் காட்சி

புதிய சாதனை

2026 ஏப்ரல் மே மாதங்களில் 51 லட்சத்து 38 ஆயிரத்து 976 பக்தர்கள் தங்களின் உடைமைகளை தேவஸ்தானம் அமைத்துள்ள கவுண்டர்களில் ஒப்படைத்து இந்த சேவையை பயன்படுத்தியுள்ளது சாதனையாகும். கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் இந்த சேவைகளை 44 லட்சத்து 58 ஆயிரத்து 103 பக்தர்களே பயன்படுத்தி இருந்தனர். இந்த ஆண்டு 6 லட்சத்து 80 ஆயிரத்து 873 பக்தர்கள் கூடுதலாக பயன்படுத்தி உள்ளனர்.

அதிலும் கடந்த வார இறுதியில், அதிக பக்தர்கள் வந்த 3 நாட்களில் மட்டும் 3 லட்சத்து 41 ஆயிரத்து 742 பக்தர்கள் இந்த இலவச சேவையை பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

லக்கேஜ் டெலிவரி மையத்தில் தங்கள் உடைமைகளை பெறுவதற்காக காத்திருக்கும் பக்தர்கள்

எந்தவித புகாரும் இல்லை

பணியாளர்கள் உடைமைகளைத் திருப்பதியிலிருந்து திருமலைக்குச் பாதுகாப்பாகக் கொண்டு சென்று, எவ்விதச் சிக்கலுமின்றி பக்தர்களிடம் திரும்ப ஒப்படைத்துள்ளனர். இந்த சேவைகள் தொடங்கிய நாள் முதல் இதுவரை எந்தவொரு பொருளும் தொலைந்துபோகவோ, காணாமல் போகவோ அல்லது மாற்றப்படவோ இல்லை என்பதும் அது குறித்து பக்தர்களிடமிருந்து எந்த ஒரு புகாரும் வரவில்லை என்பதும் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இந்த பயனுள்ள சேவைகளை பெற பக்தர்கள் தங்களின் உடமைகள், செல்போன்களை அதிகாரப்பூர்வ கவுண்டர்களில் மட்டுமே ஒப்படைக்க வேண்டும் என்றும், வழங்கப்படும் ரசீது அல்லது டோக்கனை காட்டி மட்டுமே பொருட்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.