நிலைவாசல் (AI Image) 
ஆன்மிகம்

குலதெய்வம் வாசம் செய்யும் நிலைவாசல்

வீட்டின் நிலைவாசலில் மஞ்சள் மற்றும் குங்குமம் வைப்பது மங்களகரமானது மட்டுமின்றி, நேர்மறை ஆற்றலை கொண்டுவரும் ஒரு பாரம்பரிய வழிபாடாகும்.

வீட்டின் நிலைவாசல் அல்லது தலைவாசல் என்பது பிரதான வாசல் ஆகும். வீட்டுக்கு வாசற்கால் வைக்கும்போது தனியாக அதற்கென்று பூஜைகள் செய்யப்படுவது உண்டு. அந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது நிலைவாசல்.

இந்த நிலைவாசல் வழியாகத்தான் நல்ல விஷயமாக இருந்தாலும் சரி, கெட்ட விஷயமாக இருந்தாலும் சரி வீட்டிற்குள் நுழைகிறது. எனவே, நிலைவாசல் படியை நல்லவிதமாகப் பராமரிக்கும்போது அனைத்துவித ஐஸ்வர்யங்களும் தானாகவே வீட்டுக்கு வந்து சேரும்.

குலதெய்வம்

நிலைவாசலுக்கு நம் முன்னோர்கள் மஞ்சள், குங்குமம் இட்டு அதற்கு அதிக மரியாதை செலுத்துவதை பார்த்திருப்போம். இன்றும் பெரும்பாலான வீடுகளில் இந்த வழக்கம் தொன்றுதொட்டு கடைப்பிடிக்கப்படுகிறது.

ஒரு வீட்டின் தலைவாசலில் அஷ்டலஷ்மியும் வாசம் செய்வது போல, தலைவாசல் கதவில் குலதெய்வம் குடியிருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதனாலேயே நிலைவாசலுக்கு மஞ்சள், குங்குமம் இட்டு, பூக்கள் வைத்து வணங்கும் வழக்கம் உள்ளது. பண்டிகை காலங்களில் நிலைவாசலில் மாவிலை தோரணம் கட்டி வணங்குகிறார்கள்.

நிலைவாசலை எப்படி பூஜிக்க வேண்டும்?

வீட்டின் பூஜையறையில் காட்டும் ஊதுவத்தியை நிலைவாசல்படிக்கும் காட்ட வேண்டும். குலதெய்வம் நின்று வீட்டை காவல் காப்பதால், பூஜையறையில் தெய்வங்களை பூஜிப்பது போல நிலைவாசலையும் பூஜிக்க வேண்டும்.

முதலில் வாசல் கதவு மற்றும் நிலைப்படியை சுத்தமாகத் துடைக்க வேண்டும். பின்னர் சுத்தமான மஞ்சளைக் கொண்டு நிலைவாசலின் இருபுறமும் அல்லது கீழ்ப்பகுதியில் திலகமாகவோ அல்லது கோடுகளாகவோ வைக்க வேண்டும். அந்த மஞ்சளின் மீது குங்குமத்தை வைக்க வேண்டும். இதைச் செய்து முடித்த பிறகு வாசலின் இருபுறமும் அகல் விளக்கு ஏற்றி வழிபடலாம். அகல் விளக்குகளை காலை, மாலை இருவேளையும் ஏற்றலாம். இவ்வாறு செய்யும்போது கண்டிப்பாக குடும்ப தேவதைகளும், குலதெய்வமும் வீடுகளில் விரும்பி வாசம் செய்வார்கள். அஷ்ட ஐஸ்வர்யமும் வீட்டில் நிறைந்திருக்கும் என்பது ஐதீகம்.

மகாலட்சுமியின் அம்சம்

நிலைவாசலில் மஞ்சள் மஞ்சள் பூசுவதன்மூலம் மகாலட்சுமியின் அம்சம் நிலைக்கும். அத்துடன் மஞ்சள் கிருமி நாசினியாகவும் பாதுகாப்பு வழங்கும்.

தினமும் நிலைவாசல் படிக்கு மஞ்சள் குங்குமம் வைத்து பூஜை செய்யாவிட்டாலும், வெள்ளிக்கிழமைகளில் மட்டுமாவது வீட்டில் பூஜை செய்யும் பொழுது கட்டாயம் நிலை வாசலுக்கு மஞ்சள், குங்குமம் வைத்து பூஜை செய்வது நல்லது.

புனித நீரை தெளித்தல்

கோவிலுக்குச் சென்று வரும்போது அங்கே செய்யப்படும் அபிஷேக நீரை வாங்கி வந்து அதை நிலைவாசல்படியில் தெளிக்கலாம். புனித யாத்திரை போன்ற இடங்களுக்குச் செல்லும்போது அங்கிருக்கும் புனித நதியிலிருந்து நீரைக் கொண்டு வந்து அதை நிலைவாசலில் தெளிப்பதால் துர்சக்திகள் வீட்டினுள்ளே நுழையாது.

வீட்டிலேயே புனித நீரை தயாரித்து தெளிக்கலாம். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து அதில் கொஞ்சம் மஞ்சள் பொடி, ஒரு துண்டு பச்சை கற்பூர பொடியை கலந்து, அதனுடன் ஏலக்காய் பொடி 1 சிட்டிகை சேர்த்து, கிராம்பின் மொட்டு பகுதி, கற்பூரவல்லி இலை மற்றும் துளசி இலை சேர்த்து ஊற வைத்து, வடிகட்டி அந்த தண்ணீரை வாசலில் தெளிக்க வேண்டும்.

இந்த பொருட்களை முந்தைய நாள் இரவே ஊறவைக்க வேண்டும். காலையில் வாசல் கதவைத் திறக்கும்போது அஷ்ட லட்சுமிகளின் நாமத்தைச் சொல்லி திறக்க வேண்டும். வாசலை சுத்தப்படுத்திய பிறகு, ஊறவைத்த பொருட்களை வடிகட்டிவிட்டு, அந்த தண்ணீரை வாசலில் தெளிக்க வேண்டும். இதனால் வீட்டில் அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெருகும் என்பது நம்பிக்கை. வியாழன், வெள்ளி நாட்களில் இவ்வாறு செய்வது நல்லது.

தெய்வீக சக்தி வாய்ந்த வாசற்படி

பிரசித்தி பெற்ற கோவில்களில் நாம் நுழையும் பொழுது அதன் வாசற்படியை ஒருபொழுதும் நாம் மிதிப்பது இல்லை. வாசல் படியை தாண்டி தான் உள்ளே செல்வோம். அதே போல வீட்டிலும் தெய்வ சக்தி வாய்ந்த வாசல் படியை மிதித்துக்கொண்டு வீட்டினுள் செல்லக்கூடாது. படியை தாண்டி தான் செல்ல வேண்டும்.

அதேபோல் ஒருபோதும் நிலவாசல் படியில் அமரக்கூடாது. வீட்டின் தலை வாசலில் மகாலட்சுமிகளும், கதவில் குலதெய்வமும் வாசம் செய்வதால் அந்த இடத்தில் தலை வைத்து படுக்கக்கூடாது. தலைவாசலில் கால் வைத்து நிற்கக் கூடாது. அங்கு நின்று தும்முவது, தலை வாருவது போன்றவற்றை செய்தால் வீட்டில் எதிர்மறை விளைவுகள் ஏற்படும், கெட்ட சக்திகளும் உள்ளே நுழைவதற்கு வசதியாக அமைந்து விடும் என்பார்கள்.

SCROLL FOR NEXT