நிலக்கோட்டை,
நிலக்கோட்டை அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கருப்புசாமி கோவில் திருவிழா விமரிசையாக நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா, விருவீடு அருகே உள்ள தருமத்துப்பட்டி கிராமத்தில் கோட்டை கருப்புசாமி கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் வருடம் தோறும் புரட்டாசி மாதத்தில் ஆண்கள் மட்டும் பங்கேற்கும் திருவிழா நடைபெறும்.
அவ்வகையில் இந்த ஆண்டின் விழாவிற்கான சாமி சாட்டுதல் நிகழ்ச்சி கடந்த 15 தினங்களுக்கு முன்பு நடந்தது. அதனை தொடர்ந்து கிராமத்தில் தண்டோரா மூலம் நேர்த்திக்கடன் செலுத்தக்கூடிய பொது மக்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பை ஏற்று நேற்று இரவு சுமார் 7 மணி அளவில் 102 கிடாய்களுடன் ஆண்கள் கோவிலுக்கு வந்தனர். அந்த ஆடுகளை பூசாரியிடம் ஒப்படைத்தனர்.
அதன் பின்னர் பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு நள்ளிரவில் அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டு தீப்பந்தம் ஏந்தி பாரம்பரிய வழக்கப்படி பூஜை செய்து, கிடாய்களை கோட்டை கருப்புசாமிக்கு பலியிட்டு படைத்தனர். பின்னர் அந்த கிடாய்கள் சமைக்கப்பட்டு அனைவருக்கும் கறிசோறு விருந்து வழங்கப்பட்டது. விடிய விடிய இந்த சிறப்பு வழிபாடு மற்றும் கறிசோறு விருந்து நடைபெற்றது.
இந்த விழாவில் வழங்கப்படும் கறிசோறு விருந்து கருப்புசாமியின் அருள் பெற்றதாகவும், கருப்புச்சாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதால் குடும்பம் மேலும் வளர்ச்சி அடையும் என்றும் நம்பப்படுகிறது.
திருவிழாவில் தருமத்துப்பட்டி கிராமம் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் ஏராளமான ஆண்கள் கலந்து கொண்டனர்.