ஆன்மிகம்

நிறை புத்தரிசி பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு - பலத்த மழையால் பக்தர்கள் வருகை குறைந்தது

கேரளாவில் பரவலாக கனமழை பெய்து வருவதால், தாழ்வான இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

நிறை புத்தரிசி பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. பலத்த மழையால் பக்தர்கள் வருகை குறைந்து காணப்பட்டது.

நிறை புத்தரிசி பூஜை

நிறை புத்தரிசி பூஜை என்பது கேரள மாநிலத்தின் பாரம்பரிய மற்றும் ஆன்மிக சிறப்புமிக்க அறுவடைத்திருவிழா வழிபாடாகும். இந்த பூஜைக்காக நேற்று மாலையில் சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார். தொடர்ந்து 18-ம் படிக்கு கீழ் உள்ள கற்பூர ஆழியில் மேல்சாந்தி தீ மூட்டினார்.

இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 5.40 மணிக்கு நிறை புத்தரிசி பூஜை சிறப்பு வழிபாடு நடைபெறும். அப்போது சன்னிதான மண்டபத்தில் வைக்கப்பட்டு இருக்கும் நெற்கதிர்களுக்கு தந்திரி புனித நீர் தெளித்து பூஜை செய்வார். இந்த நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். பின்னர் வழக்கமான பூஜை வழிபாடுகளுக்கு பின் இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.

பக்தர்கள் வருகை குறைந்தது

சபரிமலையில் பெய்து வரும் கனமழை மற்றும் பம்பை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக பக்தர்கள் சபரிமலைக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்திருந்தது. இதனால் பக்தர்கள் வருகை நேற்று குறைவாக இருந்தது. அதே சமயத்தில் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் மழையில் நனைந்தபடியும், சில பக்தர்கள் மழைக்கோட் அணிந்தபடியும் சாமி தரிசனம் செய்ததை காண முடிந்தது.

பக்தர்கள் பயணம் மறுபரிசீலனை

இந்த நிலையில், கேரளாவில் பரவலாக கனமழை பெய்து வருவதால், தாழ்வான இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பத்தனம்திட்டா மாவட்டம் அருகே உள்ள கோட்டயம், இடுக்கி மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சபரிமலை அய்யப்ப பக்தர்கள் புனித நதியாக போற்றி வரும் பம்பையிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இதனால், நிறை புத்தரிசி பூஜைக்கு வருவதை பக்தர்கள் தவிர்க்குமாறு திருவிதாங்கூர் தேவ சம்போர்டு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதனை ஏற்று தமிழக அரசும் தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் பயணத்தை மறுபரிசீலனை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.