குலசேகரன்பட்டினம்,
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவை முன்னிட்டு வருகிற 21-ந் தேதி வரை முத்தாரம்மன் கோவிலில் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகிற 20-ந் தேதி நள்ளிரவு நடைபெறும். மறுநாள்(21-ந் தேதி) மாலையில் கொடியிறக்கத்துடன் விழா நிறைவடையும். இந்த ஆண்டு தசரா திருவிழாவை காண சுமார் 15 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் தலைமையில், மாவட்ட கலெக்டர் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் வழங்கிய அறிவுறுத்தலின்படி, திருவிழா காலத்தில் பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவதை கருத்தில் கொண்டும், சாமி தரிசனத்திற்கு எவ்வித இடையூறும் ஏற்படாமல் இருப்பதற்காகவும், பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதைத் தவிர்த்து விரைவாக தரிசனம் செய்வதற்காகவும் கடந்த 11-ந் தேதி முதல் வருகிற 21-ந் தேதி வரை கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் அனைத்து பக்தர்களும் பொது தரிசன பாதை வழியாக மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். என தெரிவிக்கப்பட்டு உள்ளது.