ஆன்மிகம்

பழனி முருகன் கோவில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது

வைகாசி மாத பவுர்ணமியில் விசாக நட்சத்திரத்தில் முருகப்பெருமான் அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன.

பழனி,

உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் தைப்பூசம். பங்குனி உத்திரம். வைகாசி விசாகம், கந்தசஷ்டி போன்ற திருவிழாக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாக்கள் ஒவ்வொன்றும் முருகனை பற்றிய சிறப்புகளை கொண்டது. அந்தவகையில் வைகாசி மாத பவுர்ணமியில் விசாக நட்சத்திரத்தில் முருகப்பெருமான் அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. இந்த நாள் வைகாசி விசாக திருவிழாவாக அனைத்து முருகன் கோவில்களில் கொண்டாடப்படுகிறது. அதன்படி, பழனி முருகன் கோவிலில் இந்த ஆண்டு வைகாசி விசாக திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் காலை 8.30 மணிக்கு மேல் கொடியேற்றம் நடக்கிறது.

மேலும் 10 நாட்கள் நடக்கும் திருவிழாவில் தினசரி காலை, மாலையில் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை வீதியுலா நடைபெறுகிறது. விழாவின் 6-ம் நாளான 29-ந்தேதி இரவு 7.30 மணிக்கு மேல் பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. 30-ந்தேதி வைகாசி விசாக நாளன்று பெரிய நாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. அன்று மாலை 4.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து தேரோட்டம் நடைபெறுகிறது. அடுத்த மாதம் (ஜூன்) 2-ந்தேதி கொடி இறக்குதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.