திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் உள்ள பாலமுருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோன்று இந்த ஆண்டும் தைப்பூச விழா நடைபெறுகிறது. முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. காலை முதலே பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
தைப்பூச சிறப்பு நிகழ்வாக பிரமாண்ட பால்குட ஊர்வலம் நடைபெற்றது. கொள்ளிடம் ஆற்றில் இருந்து மண்ணச்சநல்லூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 3000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து நொச்சியம், மண்ணச்சநல்லூர், துறையூர் ரோடு, கடைவீதி வழியாக மேளதாளங்கள் முழங்க பாலமுருகன் கோவிலுக்கு வந்தனர்.
இன்று இரவு பெருவளை வாய்க்காலில் பக்தர்கள் அலகு குத்தியும், அக்னி சட்டி ஏந்தியும், காவடி எடுத்தும் கோவிலுக்கு வர உள்ளனர். தொடர்ந்து பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்படுகிறது. இந்நிகழ்வுகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை வழிபடுகிறார்கள். பின்னர் தீமிதி நிகழ்வு நடைபெற உள்ளது.