குருத்தோலை பவனி 
ஆன்மிகம்

பூண்டி மாதா பேராலயத்தில் குருத்தோலை பவனி.. திரளான பக்தர்கள் பங்கேற்பு

உன்னதங்களிலே ஓசானா பாடலை பாடிய வண்ணம் கைகளில் குருத்தோலைகளை ஏந்தி அருட்தந்தைகளுடன் கிறிஸ்தவர்கள் பக்தியுடன் பவனியில் கலந்து கொண்டனர்.

பூதலூர்,

தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பெருமைமிக்க கிறிஸ்தவ பேராலயம் பூண்டி மாதா பேராலயம். பூலோகம் போற்றும் பூண்டி மாதா என்று அழைக்கப்படும் பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு இன்று நடைபெற்றது.

இயேசுநாதர் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பாக எருசலேம் நகருக்கு வந்த பொழுது அவரை அந்த நாட்டு மக்கள் ஆலிவ் மரத்தின் இலைகளை கைகளில் ஏந்தி அவரை வரவேற்றனர். அதனை நினைவு கூர்ந்து தவக்காலத்தின் புனித வாரம் நிகழ்வுகளில் தொடக்கமாக இந்த நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.

குருத்தோலை பவனி

கைகளில் தென்னங்குருத்தோலைகள் ஏந்தி பூண்டி மாதா பேரலை அதிபர் சாம்சன் புனிதம் செய்து குருத்தோலை பவனியை தொடங்கி வைத்தார். உன்னதங்களிலே ஓசானா பாடலை பாடிய வண்ணம் கைகளில் குருத்தோலைகளை ஏந்தி அருட்தந்தைகளுடன் கிறிஸ்தவர்கள் பக்தியுடன் பவனியில் கலந்து கொண்டனர். குருத்தோலை பவனி பேராலயத்திற்குள் வந்ததும் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

இதில் பேரலாய அதிபர் சாம்சன், துணை அதிபர் ரூபன் அந்தோணி ராஜ் , தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் சேவியர், உதவி பங்கு தந்தையர்கள் செல்வகுமார், அருள்லாரன்ஸ், ஆன்மீகத் தந்தையர்கள் ஜோசப் பீட்டர், பிரான்சிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். திருப்பலியில் கலந்து கொண்டவர்கள் வைத்து இருந்த குருத்தோலைகளை சிலுவை வடிவில் செய்து தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.