பங்குனி திருவிழா கொடியேற்றம் 
ஆன்மிகம்

தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் கோவில் பங்குனித் திருவிழா கொடியேற்றம்

கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதற்காக கொடிமரம் பாலாலயம் செய்யப்பட்டுள்ளதால் தற்காலிக கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது.

தென்திருப்பேரை,

தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நவதிருப்பதிகளில் 7வது ஸ்தலமாகவும் சுக்கிர ஸ்தலமாகவும் தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் கோவில் அமைந்துள்ளது. தென்திருப்பேரை தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள இக்கோவிலில் மூலவர் மகர நெடுங்குழைகாதர், குழைக்காத நாச்சியார், திருப்பேரை நாச்சியார் அம்பாள்களுடன் அருள்பாலிக்கிறார்.

மற்ற நவதிருப்பதி கோவில்களில் கருடன் சன்னதி மூலவருக்கு நேர் எதிரே அமைந்துள்ளது. ஆனால் தென்திருப்பேரை ஆலயத்தில் மூலவர் சன்னதிக்கு வலதுபுறமாக சற்று விலகி இருப்பது சிறப்பு.

இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனித் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பங்குனித்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் கோவில்

திருவிழா கொடியேற்ற நிகழ்வை முன்னிட்டு இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு 4 மணிக்கு விஸ்வரூபம், 5.30 மணிக்கு நித்தியல், 6.15 மணிக்கு கொடிப் பட்டம் மாடவீதி சுற்றி வந்தது.

பின்னர் 6.45 மணிக்கு உற்சவர் நிகரில்முகில் வண்ணன் ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் மணவாள மாமுனி சன்னதி அருகில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளினார். கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதற்காக கொடிமரம் பாலாலயம் செய்யப்பட்டுள்ளதால் தற்காலிக கொடி மரத்தில் கொடி மர பூஜை நடந்தது. தொடர்ந்து அந்த கொடிமரத்தில் காலை 7.40 மணிக்கு அர்ச்சகர் திருவேங்கடத்தான் கொடி ஏற்றினார்.

இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர் ராகுல், நிர்வாக அதிகாரி அஜித், ஆய்வாளர் நம்பி உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருவிழா காலங்களில் தினசரி காலை தோளுக்கினியானில் உற்சவர் நிகரில் முகில்வண்ணன் புறப்பாடு நடைபெறுகிறது. பின்னர் இரவு 7 மணிக்கு பரங்கி நாற்காலி, சிங்கம், அனுமன், ஷேச வாகனங்களில் வீதி உலா நடைபெறும்.

வருகிற 5ஆம் தேதி கருடசேவை நடைபெறுகிறது. சிகர நிகழ்வான தேரோட்டம் வரும் ஏப்ரல் 9 ந்தேதி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.