திருப்பரங்குன்றம்:
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி திருவிழா 15 நாட்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி இன்று அதிகாலையில் கொடிப்பட்டம் வீதிகளில் கொண்டு செல்லப்பட்டது. கொடிப்பட்ட ஊர்வலம் கோவிலை அடைந்ததும், கொடிமரத்தில் கட்டப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
அதேசமயம், உற்சவர் சன்னதியில் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு 16 வகை அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் தெய்வானை சமேதமாய் சுப்பிரமணிய சுவாமி கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார். இவர்களது முன்னிலையில் காலை 8.35 மணியளவில் கொடிக்கம்பத்தில் கொடியேற்றப்பட்டது. பின்பு கொடிமரத்திற்கு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
பங்குனி திருவிழா நாட்களில் தினமும் காலையிலும் இரவிலும் வாகன வீதி உலா நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் முருகப்பெருமான் தெய்வானையுடன் எழுந்தருளி நகரின் முக்கிய வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
28ஆம் தேதி இரவு 8 மணிக்கு மேல் யானை வாகன வீதி உலா நடைபெறுகிறது. இது கைப்பாரம் நிகழ்ச்சி என்று அழைக்கப்படுகிறது. இதில், கோவிலில் உள்ள வாகனங்களிலேயே அதிக எடை கொண்ட வெள்ளியிலான யானை வாகனத்தில் எழுந்தருளும் முருகப் பெருமான், தெய்வானையை பக்தர்களும் கோவில் சீர்பாதங்களும் கைப்பாரமாக சுமந்து செல்வது தனிச் சிறப்பாகும். இதையொட்டி பக்தர்களுக்கு பிரசாதமாக சந்தனம் வழங்கப்படும்.
ஏப்ரல் 1ஆம் தேதி பங்குனி உத்திரம் அன்று ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்வும், இரண்டாம் தேதி சூரசம்ஹாரமும், மூன்றாம் தேதி முருகப்பெருமானுக்குத் தங்க கிரீடம் சூட்டி நவரத்தினங்களால் செங்கோல் வழங்கும் பட்டாபிஷேகமும் நடைபெறுகிறது.
திருவிழாவின் முத்தாய்ப்பாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் முன்னிலையில் 4 -ம்தேதி முருகப்பெருமான்-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. 5-ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.