மதுரை,
மதுரை காமராஜர் சாலை தெப்பக்குளம் பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இது மீனாட்சி அம்மன் கோவிலை சார்ந்த உபகோவிலாகும். இந்த கோவிலில் நடைபெறும் பங்குனி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டின் பங்குனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவையொட்டி மாரியம்மன் நேற்று முன்தினம் கோவிலில் இருந்து புறப்பாடாகி மீனாட்சி அம்மன் கோவிலை அடைந்தார். அங்கு மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது.
அதை தொடர்ந்து நேற்று மாலை 6 மணிக்கு சிம்ம வாகனத்தில் மாரியம்மன் எழுந்தருளி காட்சி அளித்தார். அப்போது மீனாட்சி, சுந்தரேஸ்வரரிடம் இருந்து கொடிப்பட்டத்தை பூசாரி பெற்றுக்கொண்டு, யானை மீது அமர்ந்து 4 சித்திரை வீதி வழியாக வலம் வந்து தெப்பக்குளம் கோவிலுக்கு வந்து சேர்ந்தார்.
அங்கு இரவு 11 மணிக்கு மேல் மாரியம்மன் கோவிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. அதை தொடர்ந்து சிறப்பு பூஜையுடன் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
பங்குனி திருவிழாவில் 17-ந்தேதி பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவர். அப்போது மாரியம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி தெப்பக்குளத்தை சுற்றி வலம் வந்து காட்சி அளிப்பார். 18-ந்தேதி திருவிளக்கு பூஜையும், 19-ந்தேதி இரவு பூப்பல்லக்கில் அம்மன் பவனியும் நடக்கிறது. அதை தொடர்ந்து 20-ந்தேதி சிகர நிகழ்ச்சியான சட்டத்தேரில் மாரியம்மன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.
பின்னர் 21-ந்தேதி மாவிளக்கு எடுத்தும், பொங்கல் வைத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வு நடைபெறும். அன்று இரவு தீர்த்தவாரியுடன் பங்குனித்திருவிழா நிறைவு பெறுகிறது. விளக்கு பூஜை மற்றும் பால்குடத்திற்கு இலவச டோக்கன் கோவிலில் முன்னதாக நேரில் வந்து பெற்று கொள்ளலாம். இதற்கான ஏற்பாடுகளை மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர்கள், இணை கமிஷனர் சுரேஷ் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.