தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள நவதிருப்பதிகளில் ஒன்பதாவது திருப்பதியாக விளங்கும் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் ஆண்டுக்கு நான்கு திருவிழாக்கள் நடைபெறும். மாசி மாதம் மற்றும் வைகாசி மாதம் நம்மாழ்வார்க்கும், பங்குனி மாதம் மற்றும் சித்திரை மாதம் ஆதிநாதருக்கும் திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டின் பங்குனித் திருவிழா கடந்த 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது.
விழாவின் 9-ம் நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது. சிறப்பு பூஜைக்குப் பின்னர் காலை 7.10 மணிக்கு உற்சவர் பொலிந்து நின்ற பிரான் தேரில் எழுந்தருளினார். பின்னர் அலங்காரம் நடந்தது. 8.05 மணிக்கு தேர் நிலையில் இருந்து புறப்பட்டது.
பக்தர்கள் ‘கோவிந்தா’ முழக்கம் எழுப்பியபடி வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேர் நான்கு ரதவீதி வழியாக சுற்றி வந்து மதியம் நிலையை அடைந்து. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.