கருடனுக்கு கண் திறந்து காட்சியருளல் 
ஆன்மிகம்

பறக்கை மதுசூதன பெருமாள் கோவிலில் கருடனுக்கு கண் திறந்து காட்சியருளல்

பங்குனி திருவிழாவில் வரும் 30-ம் தேதி காலையில் தேரோட்டம் நடைபெறுகிறது.

சுசீந்திரம்,

குமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோவிலான பறக்கை மதுசூதன பெருமாள் கோவிலில் பங்குனி மாத திருவிழா கடந்த 22-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

திருவிழாவையொட்டி தினமும் வாகன பவனி, சப்பர ஊர்வலம், பக்தி இன்னிசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

பறக்கை மதுசூதன பெருமாள் கோவில்

5-ம் திருவிழாவான நேற்று (வியாழக்கிழமை) இரவு கருடனுக்கு கண் திறந்து பெருமாள் காட்சியருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து இரவு 10.30 மணிக்கு மேல் கருட வாகனத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

9-ம் திருவிழாவான வருகிற 30-ம் தேதி காலை 9.30 மணிக்கு மேல் தேரோட்டம் நடைபெறுகிறது. இதில் சாமி தேர், பிள்ளையார் தேர் என இரு தேர்கள் உலா வருகின்றன. இரவு 9‌ மணிக்கு சப்த வர்ண நிகழ்ச்சியும், 9.30 மணிக்கு வெள்ளி கருட வாகனத்தில் சுவாமி வேட்டைக்கு எழுந்தருளலும். நடக்கிறது. 10-ம் திருவிழாவான 31-ம் தேதி மாலை 4.30 மணிக்கு வெள்ளி கருட வாகனத்தில் சுவாமி ஆராட்டுத்துறைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், இரவு 11 மணிக்கு தெப்பத் திருவிழாவும் நடைபெறுகிறது.