தேரோட்டம் 
ஆன்மிகம்

பரமத்திவேலூர் மகா மாரியம்மன் கோவில் தேரோட்டம்

விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

பரமத்திவேலூர்,

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரில் உள்ள மகா மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த மாதம் 15-ஆம் தேதி இரவு கம்பம் நாட்டப்பட்டு தொடங்கியது. 16-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு ஆராதனைகளும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

30-ஆம் தேதி இரவு வடிசோறு, பரிவட்டம் கூட்டுதல் மற்றும் திருத்தேர் நிலை பெயர்த்தலும் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. சிறப்பு பூஜைகளுக்குப் பின்னர் காலை 9 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டது. இதில் பரமத்திவேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். திருத்தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று நேற்று இரவு மீண்டும் நிலையை அடைந்தது.

தேரோட்டத்தை முன்னிட்டு பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இன்று (1-ஆம் தேதி) புதன்கிழமை இரவு பொங்கல், மாவிளக்கு பூஜையும், கிடா வெட்டுதலும், நாளை 2- ஆம் தேதி அதிகாலை கம்பம் காவிரி ஆற்றுக்கு செல்லுதலும், நாளை மறுநாள் 3-ஆம் தேதி மாலை மஞ்சல் நீராடல் விழாவும் நடைபெறுகிறது.

திருத்தேர் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை வேலூர் மகா மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் எட்டுப்பட்டி ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.