பரமத்திவேலூர்,
சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு கோவில்களில் விநாயகப் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அன்றைய தினம் விநாயகர் கோவில்களில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு விநாயகரை தரிசனம் செய்தனர்.
அவ்வகையில் நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் பேட்டையில் உள்ள பஞ்சமுக ஹேரம்ப விநாயகர், கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள விநாயகப் பெருமானுக்கு சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் விநாயகப் பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு விநாயகப் பெருமானை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அதேபோல் பொத்தனூர், வெங்கமேடு வல்லப கணபதி கோவில், பரமத்திவேலூர் சக்திநகரில் உள்ள விநாயகர், பரமத்திவேலூர் காவிரி கரையில் அமைந்துள்ள சத்திரத்து விநாயகர், பொத்தனூர் மகா பகவதியம்மன் கோயிலில் உள்ள விநாயகர் மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.
இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.