சென்னை செங்குன்றம் அருகில் உள்ளது ஞாயிறு புஷ்பரதேஸ்வரர் கோவில். ஒருமுறை பிரம்மதேவர் யாகம் செய்தபோது, அதில் ஏற்பட்ட தவறால் சூரியனின் ஒளி மங்கியது. தன் ஒளியை மீண்டும் பெற சூரியன் இத்தலத்து ஈசனை வழிபட்டதாக தல புராணம் கூறுகிறது.
ஞாயிறு தலத்துக்கு வந்த சோழ மன்னன், சிவபெருமான் உறைந்திருந்த தாமரை மலரை வாளால் வெட்டியதால் தனது கண் பார்வை இழந்தான். பின்னர் அந்த ஆலயத்தை கட்டிய பிறகுதான் அவனுக்கு பார்வை கிடைத்துள்ளது. இதனால் ஞாயிறு தலம் கண் நோய்களுக்கு மிகச்சிறந்த பரிகார தலமாக திகழ்கிறது. கண் பிரச்சினைகள் உள்ள பக்தர்கள் அல்லது கண் அறுவை சிகிச்சை செய்ய உள்ள பக்தர்கள் இங்கு வந்து சூரிய பகவானை வழிபட்டு, விரைவாக குணமடைய வேண்டும் என வேண்டிக்கொள்கிறார்கள்.
கண்களில் பிரச்சினை இருப்பவர்கள் இந்த தலத்துக்கு வந்து கோதுமை, சிவப்பு துணி, தாமரை பூ, தாமிர உலோகம் ஆகியவற்றை சூரிய பகவானுக்கு படைத்து அர்ச்சனை செய்து வழிபட்டால் பலன் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை இந்த வழிபாடு செய்வது நல்லது.
ஞாயிற்றுக்கிழமையில் வர முடியாதவர்கள் அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் இந்த வழிபாட்டை செய்யலாம். இந்த வழிபாட்டின் போது கோதுமை பிரசாதம் நைவேத்தியமாக படைப்பது நல்லது. கோதுமை கேசரி, கோதுமை பொங்கல் ஆகியவற்றை படைக்கலாம். இந்த கேசரி, பொங்கலை பக்தர்கள் வீட்டில் இருந்தே தயார் செய்து கொண்டுவந்து சூரியனுக்கு படைக்கலாம். வழிபாடு முடிந்த பிறகு இந்த பிரசாதங்களை ஏழை எளியவர்களுக்கு விநியோகம் செய்யலாம். இப்படி செய்தால் கண் பிரச்சினைகள் தீரும் என்பது நம்பிக்கை.
உடல்நலப் பிரச்சினைகள், வாழ்க்கையில் ஏற்படும் தடைகள், வேலை/தொழில் தொடர்பான பிரச்சினைகள் நீங்கவும், வேண்டுதல்கள் நிறைவேறவும் கோவிலில் 10 நெய் விளக்குகளை ஏற்றி வழிபடுவதுடன், கர்ப்ப கிரக விளக்கிற்கு சுத்தமான நெய் வழங்கலாம். கோவிலுக்கு வெளியே உள்ள ஏழைகளுக்கு உணவு வழங்கலாம்.